Published : 04 May 2016 09:24 AM
Last Updated : 04 May 2016 09:24 AM
தமிழகத்தில் திடீரென மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் பெருகும்; உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் குழுவில் ரித்தீஷும் இடம் பெற்றுள்ளார். பிரச்சாரத்துக்கு செல்வதற்கு முன்பு நேற்று அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:
அதிமுகவுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக சொல்லப்படுகிறதே?
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவில் இருந்தேன். அப்போது மக்கள் எங்களை தொகுதிக்குள்ளேயே விடவில்லை. வழியில் மறித்து கேள்வி கேட்டனர். ஆனால் இப்போது ஆட்சிக்கு எதிராக மக்களிடம் அப்படி பெரிதாக எந்தக் கோபமும் இல்லை. ஆட்சியின் சாதனைகளை மக்கள் அனுபவித்துக் கொண் டிருப்பதால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி.
திமுக தேர்தல் அறிக்கையும் பிரச்சார யுத்தியும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக தேர்தல் அறிக்கை மகா கேவலமாக இருக்கு. ‘சேல்ஸ் ரெப்’ மாதிரி சட்டைய மாட்டிக்கிட்டு அந்த அறிக்கையை வாசிக்கிறாரு ஸ்டாலின். ‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’னு அவங்க அப்பாருக்கு ரெண்டே ரெண்டு வசனம் மட்டும் குடுத்துருக்காங்க. எங்களோட தேர்தல் அறிக்கை வந்ததும் இதெல்லாம் காணாமல் போயிரும்.
இந்தத் தேர்தலில் மதுவிலக்கு பிரதான கோஷமாகிவிட்டதே?
1974-ல் இருந்து கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக தமிழக மக்களை குடிகாரர்களாக வைத்திருந்துவிட்டு, இப்போது தேர்தலுக்காக திடீரென உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று கருணாநிதி சொல்வது கேவலமான செயல். உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் பெருகும்; உயிர்ப்பலி அதிகரிக்கும். அதனால்தான் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்கிறார் முதல்வர். முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஒன்றரை ஆண்டுகளாவது தேவைப்படும்.
உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் கடந்த ஒன்றரை வருடத்தில் அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி இருக்கலாமே?
அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருந்தன.
வேலைகள் நடந்தது உண்மையானால், ‘மதுவிலக்கு சாத்தியமில்லை’ என சட்டப்பேரவையிலேயே அமைச்சர் அறிவித்தது ஏன்?
எதையும் முழுமையாக செய்து முடிப்பதற்கு முன்பாக சொல்ல முடியாது இல்லையா? அதனால்தான் அமைச்சர் அப்படி அறிவித்தார்.
பழைய பகை காரணமாக உங்களது உறவினரான திமுக வேட்பாளர் திவாகரன் போட்டியிடும் திருவாடானை தொகுதியில் கருணாஸை ஜெயிக்க வைக்க நீங்கள் அதிகம் பாடுபடுவதாக கூறப்படு கிறதே?
கருணாஸ் இல்லை.. தலைமை அங்கே யாரை நிறுத்தி இருந்தாலும் அவரை ஜெயிக்க வைக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு. ராமநாதபுரத்தில் நான்கு தொகுதிகளிலும் அதிமுகவை ஜெயிக்க வைத்து சுப.தங்கவேலன் முகத்தில் கரியைப் பூசுவோம்.
திமுகவுக்கு சாதகமான தலித் வாக்குகளை பிரிப்பதற்காக நீங்கள்தான் ஜான்பாண்டியனை திருவாடானையில் நிற்கத் தூண்டியதாக சொல்கிறார்களே?
ஜான்பாண்டியன் எனக்கு நல்ல நண்பர்; அவ்வளவுதான். அவர் தனியாக ஒரு கட்சி வைத்து நடத்தும்போது நான் சொல்வதை எப்படிக் கேட்பார்?’’
இவ்வாறு ரித்தீஷ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT