Published : 11 May 2022 12:32 AM
Last Updated : 11 May 2022 12:32 AM

ரூ.98 கோடியில் காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: சென்னை காசிமேட்டில் ரூ.98 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீனவர்களின் தேவைக்கேற்ப பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு கூடிய மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் உயரதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: "சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்துவது குறித்த மிகப்பெரிய அறிவிப்பை கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். அதன்படி, ரூ.98 கோடி செலவில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளது.

குளிர்சாதன வசதியுடன் கூடிய பதப்படுத்தும் அரங்கம், ஐஸ் குடோன் உள்ளிட்டவை இங்கு ஏற்படுத்தப்படவுள்ளன. பல்வேறு வசதிகளை கொண்ட நவீன மீன்பிடி துறைமுகமாக இது உருவாக உள்ளது. அத்தகைய மீன்பிடித்துறைமுகத்தை ஏற்படுத்த உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீன்பிடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில்முனைவோருக்கு 60 சதவீதம் மானியத்துடன் கூடிய வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தர இருக்கிறது. அதற்கா இன்னும் இரண்டு மாதத்தில் காசிமேடு துறைமுகத்திற்கான டெண்டர் விடப்படும்.

2015-ம் ஆண்டிலிருந்து மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7,500 கோடி முதலீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மீன்வளத்துறையில் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வருவது தான் அரசின் நோக்கம். மீனவர்களின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு. அதற்காக மத்திய அரசு தனி கவனம் செலுத்தும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கடல்பாசி பூங்கா ஏற்படுத்தப்படவுள்ளது. கடல்பாசி தொழில் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பூங்காவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான இடத்தேர்வு இன்னும் 10 முதல் 15 நாட்களில் செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x