Published : 10 May 2022 08:24 PM
Last Updated : 10 May 2022 08:24 PM
சென்னை: 16-வது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தயாகம் கவி 8,446 கேள்விகளை எழுப்பியுள்ளார். சட்டபேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 16-வது சட்டப்பேரவையின் மூன்றாம் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி ஜன.7-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் (சிறப்புக் கூட்டம்) பிப்.8-ம் தேதியும், மூன்றாவது கூட்டம் மார்ச் 18-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரையிலும் நடபெற்றது. தமிழக பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் கடந்த ஏப்.6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெற்றது.
அதிகமான கேள்விகளை எழுப்பிய 5 எம்எல்ஏக்கள்:
இந்தக் கூட்டத்தொடரில் அதிக அளவு மூல வினா கேட்ட உறுப்பினர்களில், திமுகவைச் சேர்ந்த ப.சிவகுமார் என்ற தாயகம் கவி அதிகபட்சமாக 8,446 கேள்விகளைக் கேட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து, பாமக சட்டமன்றக் குழுத் தலைவரான ஜி.கே.மணி 8312 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதேபோல், 5425 கேள்விகளை எழுப்பிய திமுகவைச் சேர்ந்த எ.எம்.வி.பிரபாகரராஜா மூன்றாவது இடத்திலும், பாமகவைச் சேர்ந்த அருள் 5036 கேள்விகளை எழுப்பி நான்காவது இடத்திலும், பாமகவைச் சேர்ந்த ச.சிவகுமார் 2937 கேள்விகளை எழுப்பி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
அதிகமான கேள்விகளுக்கு பதிலளித்த 5 அமைச்சர்கள்:
சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 14 கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலா 13 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 12 கேள்விகளுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தலா 11 கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT