Published : 07 May 2016 04:52 PM
Last Updated : 07 May 2016 04:52 PM
திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் களத்தில் 17 பேர் இருந்தாலும், அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமண னுக்கும் நேரடியாக போட்டி நிலவுகிறது.
தேமுதிக - தமாகா- மக்கள் நலக்கூட்டணியின் மாடசாமி, பாஜக மகாராஜன், பாமக கண்ணன் ஆகியோர் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு இணையான போட்டியை அளிக்கவில்லை.
வெற்றி யாருக்கு?
இத்தொகுதியில் 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவை தேர்தல்களில் 3 முறை காங்கிரஸ், 5 முறை அதிமுக, 6 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2011 தேர்தலிலும் நயினார் நாகேந்திரனுக்கும், ஏ.எல்.எஸ்.லட்சு மணனுக்கும் இடையில்தான் நேரடி போட்டி இருந்தது. 50 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக கடந்த முறை வெற்றிபெற்றது. இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை இருக்கிறது.
முத்துக்குமாரசாமி விவகாரம்
இத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் ஆகியோர் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகா ரத்தை பிரதானமாக பேசியிருந்தனர். இவ்விவகாரம் இத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. பிள்ளைமார் சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இதுபோல் தாழ்த்தப்பட்ட சமுதாய வாக்குகள், பேட்டையில் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் இருக்கின்றன.
வேட்பாளர்களின் நம்பிக்கை
கடந்த 5 ஆண்டுகளில் அரசின் இலவச திட்டங்களின்கீழ் பல்வேறு பொருட்களையும் கிராமங்களுக்கு கிடைக்குமாறு நயினார்நாகேந்திரன் செய்திருப்பதை பலமாக அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் தங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் என்று திமுக தரப்பு நம்பியிருக்கிறது.
வெற்றிக்கான பயணத்தில் அதிமுகவும், திமுகவும் ஒன்றை யொன்று முந்திக் கொண்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT