Published : 10 May 2022 05:42 PM
Last Updated : 10 May 2022 05:42 PM
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், கட்டங்களை அகற்றுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தடை கோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டடங்கள் உள்ளிற்றவற்றை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.ஏ.புரம் பகுதி மக்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், "சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், அது ஓர் உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தற்போது மாநில முதல்வர் மாற்று இடம் வழங்குவதாக கூறியுள்ளார், ஆனால், அந்த இடம் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மாற்று இடமோ, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை" என வாதிட்டார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில், "ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையே தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதேவேளையில் இந்த மக்களுக்காக மாற்று இடம் பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய 3 பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வசித்த பலர் காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீசை பெற்று காலி செய்து விட்டனர். ஆனால் தற்போது இருப்பவர்கள் காலி செய்ய மறுக்கிறார்கள்" என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் 2011 முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாநில அரசு இதனை செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் மாநில அரசின் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை, அதை அவர்கள் செய்யட்டும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவதில்லை.
மேலும், ஆக்கிரமிப்பு அகற்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் காலி செய்வதற்கு குறிப்பிட்ட காலம் அவகாசம் வழங்கியிருந்தால், அதை அவர்கள் கடைபிடிக்க வேண்டும். ஓர் உத்தரவை அமல்படுத்துவது அரசின் கடமை, அதை தானே முதல்வர் செய்து வருகிறார்" என்று தெரிவித்தனர்.
அப்போது, மனுதாரர் தரப்பில், "இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே இது நியாயம் இல்லை. மேலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இத்தனை காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது அவசரப்படுத்துகின்றனர். மேலும், குடியிருப்புகளுக்கான மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவைகளையும் நிறுத்தி விட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், "ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்கப் போவதில்லை. ஏற்கெனவே பல குடும்பங்கள் காலி செய்த பின்னரும் தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர்? முதல்வர் சட்டமன்றத்தில் கூறியதில் இருந்து அவர் இந்த விவகாரத்தில் அவர் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார் என தெரிகிறது. எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் விசயத்தில் உரிய தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள். அதேவேளையில் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு இந்த மனுதாரர்களை மாற்றலாம். மேலும் அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனுக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2011-இல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுத்து நிறுத்தும் நோக்கத்திலானது என்றே கருதுகிறோம். எனவே, ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.
அதேவேளையில், ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் ஆக்கிரமப்பு அகற்றம், மாற்று இடம் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...