Last Updated : 03 May, 2016 05:51 PM

 

Published : 03 May 2016 05:51 PM
Last Updated : 03 May 2016 05:51 PM

நன்னிலம் தொகுதி பிரச்சாரத்தில் பின்தங்கிய காங்கிரஸ்: கூட்டணிக் கட்சியினர் கவலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியினர், பிரச்சாரத்தில் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டணிக் கட்சியினர் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னரே, தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. நன்னிலம் தொகுதி வேட்பாளராக, கொரடாச்சேரியைச் சேர்ந்த துரைவேலன் அறிவிக்கப்பட்டார்.

அதிமுக சார்பில் இத்தொகுதியில் உணவுத் துறை அமைச்சரான ஆர்.காமராஜ், மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் பணிமனை திறப்பது, செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது, கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் மேற்கொள்வது என அதிமுகவினர் பரபரப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் பிரச்சாரம் குறிப்பிடும்படியாக இல்லை என்றும், கூட்டணிக் கட்சியினர் இல்லாமல், காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே தனியாக தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. மேலும், முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பது, தேர்தல் பணிமனை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் மட்டுமே ஈடுபடுவதாகவும், பிரச்சாரத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் நடிகர்கள் தியாகு, குண்டுகல்யாணம், ஆனந்தராஜ், நடிகை விந்தியா உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். எனினும், காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் இதுவரை நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. திமுகவினர் தேர்தல் பணிகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர் என்றும் கூட்டணிக் கட்சியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் துரைவேலனின் தாத்தா தியாகராஜபிள்ளை, நன்னிலம் தொகுதியில் 3 முறை காங்கிரஸ் வேட்பாளராக இருந்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸாரின் பிரச்சாரம் துரைவேலனுக்கு வெற்றியைத் தேடித் தரும் வகையில் தீவிரமடைய வேண்டுமென்பதே கூட்டணிக் கட்சியினரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x