Last Updated : 03 May, 2016 03:06 PM

 

Published : 03 May 2016 03:06 PM
Last Updated : 03 May 2016 03:06 PM

உட்கட்சி பூசலால் திணறும் திருச்சுழி திமுக, அதிமுக வேட்பாளர்கள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு உட்கட்சிப் பூசலால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திருச்சுழியும் ஒன்று. இது இளமையான தொகுதியும்கூட. காரணம் 2006-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதி தனியாகப் பிரிக்கப்பட்டது. திருச்சுழி தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் இரு தேர்தல்களிலும் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார். திமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பும் வகித்தார்.

தற்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயல ருமான தங்கம் தென்னரசு மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால், கடந்த முறை இருந்ததுபோல் இந்த முறை எளிதாக வெற்றி பெறுவத ற்கான சூழ்நிலை திமுகவில் இல்லை என்பதே உண்மை.

காரணம் திருச்சுழி தொகுதியில் திமுகவின் பலமாக விளங்கிய எஸ்.எம்.போஸ் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இது திமுகவின் வெற்றிக்கு வேகத்தடையாக அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் களம் கண்டவர் எஸ்.எம்.போஸ். திமுக தலைவர் கருணாநிதியால் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர். திமுகவில் காரியாபட்டி ஒன்றியச் செயலராகவும், மாவட்ட துணைச் செயலராகவும் பொறுப்பு வகித்தவர்.

காரியாபட்டி உட்பட திருச்சுழி தொகுதியில் திமுகவை வளர்த் ததில் எஸ்.எம். போஸுக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் கடந்த 1977-ல் எம்.ஜி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்டவர். திருச்சுழி தொகுதியில் உள்ள காரியாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை திமுகவும் அறிந்தே வைத்துள்ளது.

ஆனால், கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண் மையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் அதிமுகவுக்கு ஆதரவாகக் கடும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது திமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், திருச்சுழி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தினேஷ்பாபுவும் உட்கட்சிப் பூசலால் கடும் நெருக் கடிகளை சந்தித்து வருகிறார். காரணம் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த வேட்பாளர் சிபாரிசு பட்டியலில் தினேஷ்பாபு பெயர் இல்லை.

அதிமுகவின் தலைமைக்கு வேண்டிய முக்கிய நபர் மூலம் தினேஷ்பாபு சீட் வாங்கியதால், அவருக்கு மாவட்டச் செயலர் மற்றும் அவரது உத்தரவால் சில ஒன்றியச் செயலர்களின் ஆதரவு இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால், அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக நடத்தப்படும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பேசும் மாவட்டச் செயலர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அண்மையில் காரியாபட்டியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் ஒரு சில நிமிடங்களிலேயே பேச்சை முடித்துக் கொண்டதும் குறிப்பிட த்தக்கது.

இதனால், எதிர்க்கட்சியின் தேர் தல் வியூகங்களை சமாளித்து மக்களிடம் வாக்கு சேகரிப் பதைவிட திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் திணறி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x