Published : 21 May 2016 08:50 AM
Last Updated : 21 May 2016 08:50 AM

திமுக-வை கைதூக்கிவிட்ட சென்னை - வடக்கு மண்டலம்

சென்னையை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் மொத்தம் 82 சட்டமன்றத் தொகுதிகள் இதில் 44 தொகுதிகளை திமுக-வும் 38 தொகுதிகளை அதிமுக-வும் பாகம் பிரித்துக் கொண்டுள்ளன. திமுக-வுக்கு பெருவாரியான வெற்றியைத் தேடித் தந்தது இந்த மண்டலம்தான்.

சென்னை திமுக-வின் கோட்டை என்ற பெருமையை கடந்த தேர்தலில் பறிகொடுத்த திமுக, இந்தத் தேர்த லில் மீட்டெடுத்திருக்கிறது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 10 தொகுதி கள் இப்போது திமுக வசம். வேட் பாளர் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் விருகம் பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளையும் திமுக கைப்பற்றி இருக்க முடியும் என்கிறார்கள்.

வெள்ளப் பாதிப்புகள் அதிமுக வெற்றிக்கு சவாலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது சரியாகவே வந்திருக் கிறது. 170-க்கும் மேற்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சியில் இருந் தும் உதவிக்கு ஓடிவர ஆளில்லை என்ற கோபத்தை ஓட்டுப் பெட்டியில் காட்டி இருக்கிறார்கள் சென்னை வாசிகள். அதனால்தான் வெள்ள நிவா ரணம் பெற்றவர்கள் கூட அதிமுக-வை ஆதரிக்கவில்லை. அதிமுக இங்கே ’கவனிப்பு’ வேலைகளில் அடக்கி வாசித்ததும் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாக இருந்ததும் திமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கி விட்டது.

சென்னையில் 11 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்திருப் பது குறிப்பிடத்தக்க விஷயம். சென்னை மற்றும் வடக்கு மண்டலத்தில் மக்கள் நலக் கூட்டணி 18 தொகுதிகளில் மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன் காட்டு மன்னார்கோவிலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். இதேபோல், ஜெயங் கொண்டத்தில் மட்டும் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் பாமக, 48 தொகுதிகளில் முன்றாமிடத்துக்கு வந்துள்ளது. இதில் 33 தொகுதிகளில் 15 ஆயிரம் வாக்குகளுக்கு மேலும் மூன்று தொதிகளில் 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேலும் பெற்றிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆவடி தொகுதியில் மதிமுக வேட் பாளர் அந்திரிதாஸ் 22,848 வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்த மண்டலத்தில் மக்கள் நலக் கூட்டணியில் அதிகபட்ச வாக்குகளை பெற்றவர் இவரே.

திருவள்ளூரில் உள்ள பத்து தொகுதி களில் மாதவரம், திருவள்ளூரை மட்டுமே திமுக கைப்பற்றி இருக்கிறது. இந்த மாவட்டத்திலும் வெள்ளப் பாதிப்புகள் இருந்த போதும் திமுக உட்கட்சிப் பூசல்கள் இங்கே அதிமுக-வுக்கு கைகொடுத்திருக்கிறது. மதுர வாயல், அம்பத்தூர் தொகுதிகளை காங்கிரஸுக்கு கைகாட்டாமல் திமுக-வே களமிறங்கி இருந்தால் ஒருகை பார்த்திருக்க முடியும். கும்மிடிப்பூண்டியை மக்கள் தேமுதிக வேட் பாளர் சேகருக்கு ஒதுக்கியதை திமுக-வினரே ஏற்கவில்லை.

பூந்தமல்லியில் கடந்தமுறை தனித்து நின்று சுமார் 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது புரட்சிபாரதம் கட்சி. இம்முறை கடைசி நேரத்தில் அந்தக் கட்சி அதிமுக-வுக்கு ஆதரவளித்ததால் இங்கே சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-வை தோற்கடித்திருக்கிறது அதிமுக.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக தோற்றாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் சராசரியாக தலா 60 ஆயிரம் வாக்குகளை பெற்றது. இந்த முறை பத்துக்கு எட்டுத் தொகுதிகளை வென்றெடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் கட்சிக்குள் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசனின் அரவணைப்பு என்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை அள்ளியது. திமுக கூட்டணிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. இம்முறை நிலைமை தலைகீழ். திமுக 7 இடங்களையும் அதிமுக 4 இடங்களையும் பிடித்துள்ளன. பாமக பிரித்த ஓட்டுகள் தான் திண்டிவனத்திலும் விழுப்புரத்திலும் அதிமுக-வுக்கு கைகொடுத்திருக்கிறது. இன்னும் சில தொகுதிகளில் பாமக தங்களுக்குச் சவாலாக நின்றபோதும் வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கால் வெற்றியை தக்க வைத்திருக்கிறது திமுக.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் ஆறு தொகுதிகள் திமுக வசமாகி இருக்கிறது. கே.வி.குப்பம், அரக்கோணம் தொகுதிகளில் உட்கட்சி விவகாரம் மற்றும் சாதி பிரச்சினையால் வெற்றியை அதிமுக-வுக்கு தாரைவார்த்திருக்கிறது திமுக. ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளால் அதிமுக கூட்டணிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

திருவண்ணாமலையில் எட்டுக்கு ஐந்து தொகுதிகள் திமுக வசம் வந்திருக்கிறது. போளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.சேகரன் 8,273 ஓட்டு வித்தி யாசத்தில் வெற்றி பெற்றிருப்பதும் திமுக அதிருப்தி வேட்பாளர் ஏழுமலை 38,861 வாக்குகள் பெற்றிருப்பதும் கவனத்தைத் திருப்புகிறது. இந்த மாவட்டத்தில் அதிமுக-வுக்கு நிகராக திமுக-வும் அனைத்துத் தொகுதிகளிலும் ’கவனிப்பு’ வேலைகளைச் செய்தது.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகளின் தாக்கம் திமுக-வுக்கு கைகொடுக்கவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் துரத்தப்பட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் 24,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது அதிமுக-வினரே எதிர்பார்க்காதது. நிம்மதியாய் தொழில் செய்ய விரும்பும் இந்த மாவட்டத்துக்காரர்கள் சாதுவானவர்களுக்கு வாய்ப்பளித் திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த கண்ணோட்டம் தான் திருமாவள வனையும் காவு வாங்கி விட்டது. இங்குள்ள ஒன்பது தொகுதிகளிலும் பாமக-வுக்கு சராசரியாக 17 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களில் மொத்தம் உள்ள நான்கு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி விட்டது. சிட்டிங் எம்.எல்.ஏ. சிவசங்கர் அரியலூர் தொகுதியில் 2043 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டிருக்கிறார்.

கடந்த தேர்தலில் குன்னம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் சிவசங்கர். இம் முறை குன்னத்தில் திமுக-வை 18,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது அதிமுக.

அதேசமயம் இங்கே, விசிக வேட்பாளர் முகமது ஷாநவாஸ் 19,853 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அரியலூரில் சிவசங்கரின் வெற்றியை தட்டிவிட்டது விசிக என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஆக, சென்னையை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் தகுதியான வேட்பாளர்கள், திட்டமிட்ட களப்பணி ஆகிய காரணங்களால் அதிமுக எதிர்ப்பு அலையை தங்களுக்குச் சாதகமாக கணிசமாக அறுவடை செய்திருக்கிறது திமுக.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x