Published : 09 May 2022 06:47 PM
Last Updated : 09 May 2022 06:47 PM

மதுரை வைகை ஆற்றின் தடுப்பணையில் குப்பைகள், கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

குப்பை கொட்டப்படுவதால் கழிவுநீர் தேங்கியுள்ள வைகை ஆற்றுப்பகுதி.

மதுரை: மதுரை வைகை ஆற்றின் தடுப்பணை அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரும் குப்பைகளும் தேங்கி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தடுப்பணை கட்டப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வைகை ஆற்றில் மழைக்காலத்தில் ஓடும் தண்ணீரையும், வைகை அணையில் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரையும் தடுப்பணைகள் கட்டி தேக்கி மதுரை மாநகராட்சியின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் வைகை ஆறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதின் நோக்கமாக இருந்தது. அதற்காக மதுரை வைகை ஆற்றில் ஏவி மேம்பாலம் அருகே ஒரு தடுப்பணையும், ஒபுளா படித்துரை அருகே மற்றொரு தடுப்பணையும் கட்டப்பட்டது.

இரு தடுப்பணைகளிலும் திட்டமிட்டப்படி வைகை ஆற்றில் வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால், அந்த தண்ணீர் குறுகிய காலத்திலே கழிவு நீராக மாறி சுகாதார சீர்கேடாக மாறிவிடுகிறது. அதற்கு வைகை ஆற்றில் தொடர்ந்து கழிவு நீர் கலப்பதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, ஏவி மேம்பாலம் அருகே பயன்பாட்டில் உள்ள தடுப்பணையில் கடந்த 3 ஆண்டாக நிரந்தரமாகவே கழிவு நீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. மாநகராட்சி நிதி ஒதுக்கி தடுப்பணைகளை பொதுப்பணித்துறை கட்டிய நிலையில் அதனை அதன் அதிகாரிகள் பராமரிக்கவில்லை. தினமும் வந்து கண்காணிப்பதும் இல்லை. அதனால், தடுப்பணையில் தற்போது கழிவு நீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், தடுப்பணை பகுதியிலே சுற்றுவட்டார குப்பைகள் கொட்டப்படுகிறது. கழிவு நீரும், குப்பையும் சேர்ந்து தற்போது அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், எந்த நோக்கத்திற்காக வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்நிலளனர்.

மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து மதுரையின் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு தகுந்த வகையில் தடுப்பணைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x