Published : 09 May 2022 06:36 PM
Last Updated : 09 May 2022 06:36 PM
சென்னை: நிலமற்றவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கிய வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்து திருத்தணி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜெயவேல், தேவகி உள்ளிட்ட 21 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'திருத்தணியில் உள்ள நிலமற்ற மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என 130 பேர் பயனடையும் வகையில் வீடு கட்டுவதற்காக அதிமுக அரசு நிலம் ஒதுக்கியது. அந்த இடத்திற்கான பட்டாவை 2020-ம் ஆண்டு திருத்தணி தாசில்தார் வழங்கினார்.
பட்டா நிபந்தனைகளின்படி, நிலம் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் வீடு கட்டப்பட வேண்டும். கரோனோ பரவல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கான மனைகளின் எல்லைகளை குறிக்காதது போன்ற காரணங்களால் மனைகளை அடையாளம் காண முடியாததால், வீடு கட்ட இயலவில்லை.
வீட்டுமனைகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்ககோரி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நகர எல்லையிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளதாலும், 25 சென்ட்டுக்கு மேலான நிலம் என்பதாலும், அந்த இடத்தை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு மாற்றப்படும் எனக் கூறி, வீட்டுமனை பட்டாவை ரத்து செய்துவிட்டதாக திருத்தணி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எனவே, தாசில்தார் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கான மனைகளை அளவிட்டு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டாவை ரத்து செய்த திருத்தணி தாசில்தார் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT