Published : 09 May 2022 04:35 PM
Last Updated : 09 May 2022 04:35 PM
சென்னை: "பூர்வகுடி மக்களை வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்துவதா சமூக நீதி?" தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த இடம் நீர்நிலைப் புறம்போக்கு என்றும், ஆக்கிரமிப்பு என்றும் கூறி ராஜீவ் ராய் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் சரியான வாதங்கள் வைக்கப்படாததால், வழக்குத் தொடர்ந்தவர் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த வீடுகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் முயற்சித்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி, அங்கு வாழ்ந்து வரும் தொழிலாளர் வர்க்கத்தினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் படையுடன் சென்று ஆக்கிரமிப்புகளை இடித்தபோது, வீட்டை இழந்த வேதனையால் கண்ணையா என்பவர் தீக்குளித்தது வேதனையின் உச்சம். தமிழகத்தில் பகாசுர நிறுவனங்கள், செல்வாக்கு மிக்கவர்கள், ஆன்மிக சேவை புரிவதாக கூறிக் கொள்பவர்கள் எல்லாம் அரசு நிலத்தை மட்டுமின்றி, யானைகள் உள்ளிட்ட விலங்குகள் நடமாடும் வனத்தையும்கூட ஆக்கிரமித்துள்ளனர். இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை மட்டும் இடித்துத் தள்ளுவதில் அவசரம் காட்டுவது ஏனோ?
ஒருவேளை நீர்நிலை ஆக்கிரமிப்பாக இருந்தால்கூட, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, அனைவரும் அங்கு குடியேறிய பின்னரே ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டியதுதானே நியாயமான நடைமுறை? அங்கே இருப்பவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? நம் குடும்பத்தைப் போன்ற குடும்பங்கள்தானே? அந்த வீட்டிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இருப்பார்கள்தானே? அவர்களிடம் இவ்வளவு அடக்குமுறை காட்டப்பட வேண்டுமா? ''குரலற்ற இந்த மக்களை காப்பாற்று'' என்ற தீக்குளித்து இறந்துப்போன கண்ணையன் போன்றவர்களின் குரல்கள் அரசின் செவிகளில் எப்போதும் விழாதா?
இளங்கோ தெரு வாசிகளின் வாழ்க்கைச் சூழலை மனதிற்கொண்டு வீடுகளை இடிக்கும் பணியை அரசு கைவிட வேண்டும். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டிவிட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது'' என்று மநீம தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரன் கண்டனம்: இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்றைய தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில், ''சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழந்துவிட்ட நிலையில், இத்தகைய வீடுகளை அகற்றும் போது கடைபிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஒருவர் உயிரை விட்ட பிறகுதான் இந்த ஞானோதயம் அரசுக்கு ஏற்படுமா?
ஆண்டுக்கணக்கில் ஓர் இடத்தில் குடியிருக்கும் ஏழை மக்களை விட்டு வெளியேற்றும்போது அவர்களுக்கு உரிய மாற்று இடத்தையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட ஆட்சியாளர்களுக்கு கிடையாதா? இவர்கள் கொடுப்பதாக கூறியுள்ள ரூ.10 இலட்சம் பறிபோன உயிரை மீட்டுத் தருமா?'' என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT