Published : 09 May 2022 02:01 PM
Last Updated : 09 May 2022 02:01 PM
புதுச்சேரி: நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கை, மருத்துவ சேவை, குறிப்பு தமிழில்தான் வழங்கப்படும். இந்தி திணிப்பு இல்லை. நிர்வாக ரீதியான சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளதால் போராட்டம் தேவையற்றது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். ஆனால் அது உண்மையா என்பதை நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
புதுவை ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சென்னையிலிருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரடியாக புதுவை ஜிப்மருக்கு வந்தார். அங்கு நிர்வாக பிரிவு அலுவலகத்தில் உள்ள இயக்குனர் ராகேஷ் அகர்வால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை, ''ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. நிர்வாகரீதியாக அளிக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டு, இந்தி திணிக்கப்படுவதாக செய்தி உலா வந்துள்ளது. ஜிப்மரில் மொழி திணிப்பு இல்லை. உள்கட்டமைப்புக்காக, நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையை தவறாக திரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 2 சுற்றறிக்கை மட்டும் வெளியில் வந்துள்ளது. இதர சுற்றறிக்கையில் பொதுமக்கள் தொடர்பான கருத்துகள், துறை ரீதியானவை தமிழில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மொழியான தமிழை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜிப்மர் மத்திய அரசின் நிறுவனம். இங்கு இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக இந்தியைப் பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டவிதிகளை நினைவுபடுத்தி உறுதிப்படுத்தும் வகையில்தான் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். ஜிப்மரில் தமிழிலேயே பெயர்ப் பலகைகள் இருக்கிறது. இயக்குனர் அலுவலகத்தில்கூட அவரின் பெயர் தமிழில்தான் முதலில் எழுதப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஆங்கிலம், 3வதாக இந்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தி மட்டும் தெரிந்த பணியாளர் சேவை புத்தகத்தில் இந்தியை பயன்படுத்தும்படி கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை, நோயாளிக்கான அறிக்கை, குறிப்புகள் தமிழில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிப்மரில் இந்தி திணிப்போ, வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். எனவே போராட்டம் என்பது தேவையற்றது" என்று குறிப்பிட்டார். தனக்கு வேறு பணிகள் இருப்பதாகக்கூறி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் தராமல் புறப்பட்டார்.
ஆளுநர் கூறியது உண்மையா- விளக்கும் நோயாளிகள்: அதே நேரத்தில் ஜிப்மரில் நோயாளிகளுக்கு பதிவு அட்டை தொடங்கி அனைத்திலும் தமிழே இல்லை. ஆளுநர் முதலில் தமிழ், அடுத்து ஆங்கிலம், இறுதியில் இந்தி என்ற அடிப்படையில்தான் அனைத்து இடத்திலும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் நோயாளிகளுக்கான பதிவு அட்டையிலேயே முதலில் இந்தியும், பின்னர் ஆங்கிலமும் மட்டுமே உள்ளது. தமிழ் முற்றிலும் இல்லை என்று தமிழக கிராமப்பகுதிகளில் இருந்து வந்திருந்த நோயாளிகள் குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT