Published : 09 May 2022 04:13 PM
Last Updated : 09 May 2022 04:13 PM
இதற்கு முன்பு எந்த முதலமைச்சரும் பதவியேற்கும்போது இருந்திராத சூழலில்தான் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஒரு புதிய அரசுக்கு முதல் 6 மாதங்களில் கிடைக்கும் ‘ஹனிமூன்’ காலம் என்ற அனுகூலம் கூட ஸ்டாலின் அரசுக்குக் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே கரோனா இரண்டாம் அலையின் நெருக்கடியை ஸ்டாலின் அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் கரோனா; பிறகு மழை, வெள்ளம் என முதல் 6 மாதங்கள் பேரிடர்களிலேயே ஆட்சியாளர்கள் சக்தியைச் செலவழிக்க வேண்டியிருந்தது.
ஓர் ஆட்சியாளர் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்கக் கூடியவராக இருக்க வேண்டும். அந்த வகையில், அரசு அதிகாரிகளின் கருத்துகளை முதல்வர் கேட்பதையும், அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதையும் கோட்டையில் கேட்க முடிகிறது. இது ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இலக்கணம். அதேவேளையில், அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது என்று பேசும் அளவுக்கு இதில் தளர்வு காட்டிவிடக் கூடாது என்பதையும் மறக்கக் கூடாது. இதேபோல விமர்சனங்களுக்கு முதல்வர் மதிப்பளிப்பதையும் கவனிக்க முடிகிறது.
கருணாநிதி காலத்தில் திமுக சீனியர் அமைச்சர்கள் மட்டும் சுதந்திரமாகச் செயல்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில், முதன்முறையாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற பி.கே.சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் போன்றோர் தனித்துச் செயல்பட முதல்வர் அனுமதித்திருப்பதையும் காண முடிகிறது. அவரவர் பொறுப்புகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிப்பது முதலமைச்சருக்கும் - அமைச்சர்களுக்கும் இடையே நல்ல புரிதலை உண்டாக்கும்.
முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் வழக்குப்பதிவு, ரெய்டுகளோடு நிற்பதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதும், வழக்குகள் அடுத்த கட்டத்துக்கு நகராமல் தொய்வு ஏற்பட்டிருப்பதும் பல ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. ஊழல் செய்தவர்களுக்குத் தண்டனை எப்படி முக்கியமோ, அதுபோல ஊழல் நடைபெறாமல் இருக்கவும் வேண்டும். இதற்கு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
திராவிட மாடல், சமூகநீதி, மாநில சுயாட்சி, ஒன்றிய அரசு போன்ற கோஷங்கள் இந்த ஓராண்டில் அதிகம் ஒலித்திருக்கின்றன. மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்கள், ஆளுநரோடு மோதல் போக்கு என்று இந்தியாவில் பாஜக அல்லாத அரசுக்கு உள்ள நெருக்கடிகளை உணர்ந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஓர் ஆட்சியின் ஓராண்டு செயல்பாடு என்பது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அச்சாரம். அதில் எதை எடுத்துக்கொள்வது, தவிர்த்துக்கொள்வது என்பதில்தான் ஆட்சியின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வெற்றி அடங்கியிருக்கிறது.
> இது, டி கார்த்திக் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT