Published : 08 May 2022 04:32 PM
Last Updated : 08 May 2022 04:32 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நடைப்பயிற்ச்சி சென்றவர் மீது கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யாதவர் தெருவைச் சேர்ந்த வாசுதேவன் என்பரவது மகன் ஜெகன் என்ற முனீஸ்வரன் (37). இவரது உறவினர் கதிர்வேல் மகன் ஜெகதீஸ்வரன் (18). மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த வம்ச சேகரபாண்டியன் மகன் உமாமகேஸ்வரன் (42). இதில் ஜெகதீஸ் மற்றும் உமாமகேஸ்வரன் ஆகியோர் மண்டபம் வேதாளையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தனர். இன்று அதிகாலை 5.40 மணியளவில் பெட்ரோல் பங்கிற்கு வேலைக்குச் செல்வதற்காக ஜெகன் தனது பைக்கில் ஜெகதீஸ் மற்றும் உமாமகேஸ்வரனை மண்டபத்திலிருந்து அழைத்துச் சென்றார். அப்போது மண்டபம் மரைக்காயர்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற கார் எதிரே வந்த ஜெகனின் இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு, வலது ஓரம் நடை பயிற்சி மேற்கொண்ட மண்டபம் ஏ.கே.தோப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி (68) என்பவர் மீதும் மோதியது. பின்னர் கார் சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பைக்கில் சென்ற ஜெகன், ஜெகதீஸ், உமாமகேஸ்வரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,
சிகிச்சையிலிருந்தபோது உயிரிழந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சம்பத்குமார் (21) மற்றும் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மண்டபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தது மண்டபம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அதனையடுத்து சம்பவ இடத்தை ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை செய்தனர். இதுகுறித்து மண்டபம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுர் சம்பத்குமாரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT