Published : 08 May 2022 03:28 PM
Last Updated : 08 May 2022 03:28 PM

'ஆன்லைன் சூதாட்ட தொடர் சாவுகளை அரசு வேடிக்கை பார்ப்பதா' - அன்புமணி கண்டனம்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் தமிழக அரசு தொடர் சாவுகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவலர் சரவணக்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாகவும், அதில் பெரும்பணத்தை இழந்து லட்சக்கணக்கில் கடனாளியானதாகவும், அதிலிருந்து மீள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதை விட பெருங்கொடுமை இருக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த 9 மாதங்களில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு உயிரிழப்பும் மனதை கலங்கச் செய்கிறது. ஆனால், அரசோ கலங்காமல் வேடிக்கை பார்க்கிறது.

தமிழகத்தில் இனியும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் அது திமுக அரசுக்குத் தான் தீராப்பழியை ஏற்படுத்தும். எனவே, இனியும் மேல்முறையீட்டை நம்பிக்கொண்டிருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x