Published : 08 May 2022 12:07 AM
Last Updated : 08 May 2022 12:07 AM
ராமேசுவரம்: தனது உண்டியல் சேமிப்பு பணத்தை இலங்கை நிவாரண நிதிக்கு வழங்கிய கீழக்கரை பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி பில்ஸா சாராவுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கல் லால் குமாவத் பாராட்டு தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இலங்கை மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும் தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அல்பைனா மெட்ரிகுலேசன் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் பில்ஸா சாரா என்ற மாணவி தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கான நிவாரணத் தொகைக்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கல் லால் குமாவதிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சங்கல் லால் குமாவத் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT