Published : 07 May 2022 12:57 PM
Last Updated : 07 May 2022 12:57 PM
கோத்தகிரி: கோத்தகிரியில் தொடங்கியுள்ள 11-வது காய்கறி கண்காட்சியில், தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஒட்டகச்சிவிங்கி, மீன், கிடார் உள்ளிட்ட அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தவும், அவர்களை ஈர்க்கவும் தோட்டக்கலைத் துறையின் மூலம் மே மாதத்தில் கோடை காட்சிகளான காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி போன்று பல்வேறு விதமான காட்சிகள் நடைபெறுகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கோடைக் காட்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்தாண்டு கோடை காட்சிகள் கரோனா பெருந்தொற்று குறைந்துள்ள காரணத்தினாலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும் மே மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோடைக் காட்சிகளின் ஆரம்பமாக இன்று கோத்தகிரி, நேரு பூங்காவில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் 11-வது காய்கறி காட்சியுடன் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காய்கறி வளங்களை பறைசாற்றும் விதமாக பல்வேறு காட்சி திடல்களை இக்காட்சியில் அமைத்து அனைத்து விதமான காய்கறிகளும் காட்சிபடுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய கொள்கையான இயற்கை வேளாண்மை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இயற்கை வேளாண்மை காட்சி திடல்கள் தோட்டக்கலைதுறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டது.
மேலும், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் சுமார் ஒன்றரை டன் காரட் மற்றும் 600 கிலோ முள்ளங்கியினை கொண்டு ஒட்டகசிவிங்கி (குட்டியுடன்) அமைக்கப்பட்டது. மேலும், காய்கறிகளை கொண்டு மீன், கிட்டார், கடிகாரம், உதகையின் 200-வது ஆண்டினை போற்றும் நோக்கில் ஊட்டி 200 என்ற சிறப்பு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை, தருமபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் இருந்து மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா, கப்பல் மீன், டோரா போன்ற வடிவங்களும் காட்சிபடுத்தப்பட்டன. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT