Published : 07 May 2022 11:53 AM
Last Updated : 07 May 2022 11:53 AM
சென்னை: 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.160 கோடியில் 66 ஆயிரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சீரமைக்கப்படவுள்ளது. மேலும் மண்டலம் வாரியாக வாழ்விட மேம்பாட்டுக் குழு அமைக்கப்படவுள்ளது.
சென்னை வாழ்விட மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கூட்டம், ரிப்பன் மாளிகையில் நடந்தது. இக்குழுவின் தலைவர் ககன்தீப் சிங் பேடி, துணை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 16 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 17 குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கூறுகையில்,"சென்னை மாநகரில் வாழும் நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழ்நிலை உருவாக்கிடவும், மாநகரில் கொள்கை உருவாக்கும் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பினை மேம்படுத்தவும், அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பினை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தவும், இதர அரசு துறைகளுடன் இணைந்து நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்டங்களை சென்றடைய செய்யவும் மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் குடும்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் சென்னை மாநகர வாழ்விட மேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சிறப்பு முயற்சியாக வாரிய கோட்டங்களின் எல்லைகள் சென்னை மாநகராட்சி மண்டல எல்லைகளுக்கு இணங்க மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் இதர நகரங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை முழுமைப்படுத்தி வர்ணம் பூசி தோற்றப் பொலிவினை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 26,483 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.68.72 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் , கூடுதலாக 40,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.100 கோடி செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சென்னை மாநகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நன்முறையில் பராமரிக்க “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” எனும் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதைத்தவிர்த்து சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக மண்டல அலுவலர்களை தலைவராக கொண்டு மண்டல அளவிலான வாழ்விட மேம்பாட்டு குழு அமைக்கப்படவுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக உதவி நிர்வாக பொறியாளர் செயல்படுவார். மேலும் 1,000 குடியிருப்புகளுக்கு அதிகமாக உள்ள திட்டப் பகுதிகளில் மாநகராட்சி உதவி பொறியாளர் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT