Published : 14 May 2016 02:13 PM
Last Updated : 14 May 2016 02:13 PM
''அடித்தட்டு மக்களிடையே இலவசங்களுக்கு எதிரான மனநிலையை உணர முடிகிறது. தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி பாஜகவுக்கே உள்ளது'' என்கிறார் வானதி சீனிவாசன்.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கடைசி நாள் பிரச்சார விறுவிறுப்புக்கு இடையில் அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல். எப்படி இருக்கிறீர்கள், பிரச்சாரம் எந்தளவில் உள்ளது?
ஓடிக்கொண்டே இருக்கிறேன். பிரச்சாரம் ரொம்ப ரொம்ப நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. தினந்தோறும் மக்களை, முக்கியமாகப் பெண்களை நேரடியாக சந்தித்து வருகிறேன். கோவை ஸ்மார்ட் சிட்டியானால் நடக்கும் நல்ல விஷயங்களையும் பேசுகிறேன். நான் இலவசத்தைப் பற்றி அவர்களிடம் பேசுவதில்லை. கல்வியைப் பற்றியும், வேலைவாய்ப்பைப் பற்றியும் பேசுகிறேன். சாலை, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அவர்களின் பிரச்சனைகளைக் காதுகொடுத்துக் கேட்கிறேன்.
மக்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி பாஜகவுக்கே உள்ளது.
மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
அடித்தட்டு மக்களிடையே இலவசங்களுக்கு எதிரான மனநிலையை உணர முடிகிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணியால் ஊழலுக்கு எதிரான ஆட்சி தருவோம் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. மக்கள் நலக் கூட்டணியில், அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று வரும் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இசுலாமியர்களின் ஓட்டு வங்கி யாருக்கு?
நாங்கள் இந்து, முஸ்லிம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. எல்லோருமே நம் நாட்டு மக்கள்தானே. சாதி, மத அரசியலைத் தள்ளிவைத்துவிட்டு பணிபுரிய ஆசைப்படுகிறேன்.
நீங்கள் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி, நகரின் இதயப்பகுதி. இங்கு நீங்கள் முன்வைக்கும் சிறப்புத் திட்டங்கள் என்ன?
முதல்முறையாக எங்கள் தொகுதி மக்களுக்காக தனித் தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறேன். தொகுதிக்கான நிதியை வெள்ளை அறிக்கையாகச் சமர்ப்பிக்கும் அளவுக்கு வெளிப்படையாக இருக்க ஆசைப்படுகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர்களுக்கான திறன் கூட்டல் மாநாடுகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், மக்கள் சேவை மையங்களை அமைக்க உள்ளோம். இலவச வைஃபை வசதி அளித்து, டிஜிட்டல் தொகுதியாக மாற்ற உள்ளோம்.
கோவைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்கள் என்னவாயின?
ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பில் மெட்ரோவும் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, மாநிலத்திலும் வந்தால் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். மோனோ ரயில் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கோவையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது சாத்தியமா?
முறையாகத் திட்டமிட்டால் முடியும். வருங்கால போக்குவரத்தையும் எண்ணி 25 வருடங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதாக மக்களிடம் கூறுகிறோம். காந்திபுரத்தில் தொடங்கி விமான நிலையம் வரை நீடிக்கும் போக்குவரத்தைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மொத்தத்தில் ஊழலற்ற, வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசக்கூடிய, இலவசம் தவிர்த்த அரசை அமைப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT