Published : 12 May 2016 05:42 PM
Last Updated : 12 May 2016 05:42 PM

முதல்வரால் முடியாதது எதுவும் இல்லை: துறைமுகம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் பேட்டி

வேட்பாளருக்கு சில கேள்விகள்

முதல்வர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார்; அவரால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறுகிறார் துறைமுகம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன்.

கடந்த காலங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதி, அக்கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஐபி தொகுதி துறைமுகம். தலைமைச்செயலகம், துறைமுகம், சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களை உள்ளடக்கிய தொகுதி. இங்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் கு. ஸ்ரீனிவாசன்.

பிரச்சாரத்துக்கு இடையில் அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப்பேட்டி.

தொகுதிக்கு நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்னென்ன?

என் முதல் இலக்கு, தொகுதியைக் குப்பையில்லாமல் மாற்ற வேண்டும் என்பதுதான். வீடுகளில் இருந்து வரும் குப்பைகளை விட, வணிக ரீதியில் உருவாகும் குப்பைகள்தான் அதிகமாக உள்ளன. அதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இரண்டாவதாக பார்க்கிங் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. முக்கியமாக பாரிமுனையில். அங்கிருக்கும் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. முக்கிய இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க வேண்டும். சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு தொகுதிக்கு வெளியிலோ, உள்ளேயோ வீடுகளைக் கட்டித்தர வேண்டும்.

தெருக்களில் வசிப்பவர்களுக்கெல்லாம் வீடுகள் கட்டிக்கொடுப்பது சாத்தியமான ஒன்றா?

கண்டிப்பாய். மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை நடக்காத ஒன்று என்றார்கள். ஆனால் முதல்வர் செய்து காண்பித்தாரே? அதைப்போல்தான் இதுவும். அவரால் முடியாதது எதுவும் இல்லை.

துறைமுகம் ஒரு திமுக கோட்டை என்று கூறுகிறார்களே?

அந்த கோட்டை 2011-லேயே உடைந்துவிட்டது. 2011 சட்டமன்ற தேர்தலிலும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம் மக்களின் ஆதரவு திமுகவுக்கே என்ற ஒரு கருத்து நிலவிவந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் எங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது என்ன செய்தீர்கள்?

துறைமுகம் தொகுதி, மழையால் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. அன்றாட கூலி வேலைகளுக்குச் செல்பவர்களால் வேலைக்குப் போக முடியாததால், அவர்களுக்கு உணவு, உடை, பாய், தலையணை வழங்கினோம். கட்சி சார்பாகவும் அரசு சார்பாகவும் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து?

அருமையாக இருக்கிறது. பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம். திருமணம் ஆகும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், கர்ப்பிணிகளுக்கான திட்டங்கள் ஆகியவையும் முக்கியமானவை.

மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்படுமா?

மதுவிலக்கு குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்து எல்லோரிடமும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். முதல்வர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x