Published : 06 May 2022 12:48 PM
Last Updated : 06 May 2022 12:48 PM
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 'ஷவர்மா' சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் ஒரு மாணவி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தருமபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று மீண்டும் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பி வந்தனர். பின்னர் நேற்று இரவு மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாஸ்ட் புட் ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினர். அங்கு சக மாணவர்களுடன் நாங்கள் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு வந்தோம் என பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பிரவீன் உள்ளிட்ட 3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர். உடன் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment