Published : 06 May 2022 01:09 PM
Last Updated : 06 May 2022 01:09 PM

7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட்: அரசுப் பள்ளி மாணவிகள் இருவருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 2 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார். உடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அரசுத் துறை அதிகாரிகள்.

சென்னை: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவிகள் சேர்க்கை பெற்றனர்.

கன்னியாகுமரியில் உள்ள ஶ்ரீ மூகாம்பிகா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் MBBS மருத்துவப் படிப்பு பயில மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி S.தங்கபேச்சி சேர்க்கை பெற்றார்.

அதேபோல் குன்றத்தூரில் உள்ள மாதா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (BDS) பல்மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி S. புவனேஸ்வரி சேர்க்கை பெற்றார்.

இந்த இரண்டு மாணவிகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக்,இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் முனைவர், மா.மதிவாணன்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x