Published : 06 May 2022 12:43 PM
Last Updated : 06 May 2022 12:43 PM

'மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும்' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாணவி சிந்துவின் மேல் சிகிச்சைக்கு நிதி வேண்டி தந்தை கோரிக்கை விடுத்த செய்தி இந்து தமிழ் இணையதளத்தில் நேற்றுமுன் தினம் (புதன்கிழமை) வெளியான நிலையில்மாணவி சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி சிந்து. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோழி வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து தவறுதலாக விழ, அவருடைய இரண்டு கால் மூட்டுகளும் கடுமையாக சேதமடைந்தன. முகத்தின் தாடையின் ஒரு பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. முன்வரிசையில் இருந்த பற்கள் முழுமையாகக் கொட்டிவிட்டன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிந்துவுக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுவிட்டன. இதன் விளைவாக சிந்து தற்போது எழுந்து நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறார். எனினும் சிந்துவால் நடக்க முடியாத சூழல் நிழவுகிறது. அவரால் நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமரவும் முடியாது.

இந்த நிலையில்தான் சிந்து தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நேற்று எதிர்கொண்டார். இதுகுறித்து, சிந்துவின் தந்தை சக்தியிடம் பேசியபோது, சிந்துவிற்கு சிகிச்சை அளிக்க போதிய நிதி இல்லை எம்றார். டீ விற்பனை செய்யும் தன்னால் பெருந்தொகையை ஏற்பாடு செய்ய முடியாது என்பதால் தனது மகளின் மேல் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும். எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக ’இந்து தமிழ் ஆன்லைன்’ செய்தி வெளியிட்டது.

செய்தியின் முழுவிவரம்: சிந்துவின் கனவை சிதைத்த விபத்து | ‘என் மகள் மீண்டும் நடக்கணும், அரசு உதவணும்’ - டீ விற்கும் தந்தை உருக்கம்

இந்த நிலையில் மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!" கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்!

மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x