Published : 06 May 2022 12:21 PM
Last Updated : 06 May 2022 12:21 PM

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் கொலை வழக்காக மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சென்னை கெல்லீஸ் சந்திப்பில் கடந்த 18 ஆம் தேதி இரவு ஆட்டோவில் வந்த சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்து பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷ் கடந்த 19 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விசாரணைக் கைதி விக்னேஷின் தலை, கண், புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகவும் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். இதில் பேசிய அவர், "விசாரணைக் கைதி விக்னேஷ் மரணத்தில் மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது. உடலில் 13 இடங்களில் காயம் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று விளக்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x