Published : 06 May 2022 10:33 AM
Last Updated : 06 May 2022 10:33 AM
சென்னை: பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நிலக்கரி பற்றாக்குறை, மின் பயன்பாடு அதிகரிப்பு, நிலக்கரியை எடுத்து வரும் ரயில் பெட்டிகள் பற்றாக்குறை என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இதுகுறித்து நான் எனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியதோடு, தமிழக சட்டப்பேரவையிலும் இந்தப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, அமைச்சரும் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்தார். இருப்பினும், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது மின் வெட்டு ஏற்படுவது என்பது வாடிக்கையாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 05-05-2022 அன்று துவங்கி 28-05-2022 வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 06-05-2022 அன்று துவங்கி 30-05-2022 வரையிலும் நடைபெற உள்ளது. இதனையொட்டி, கல்லூரித் தேர்வுகளும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்த நிலையில், தமிழக மின்சார வாரியத்தின் தலைவர் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் தேர்வு மையங்களில் மின்சார தடை ஏற்படாத வகையில் தடையில்லா மின்சார விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அதையும் மீறி மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் மண்டல தலைமைப் பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் மின் தடை ஏற்பட்டு, பின்னர் அரை மணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாகவும், வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி
நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுத் தேர்வுகள் நடைபெறும் போது, தேர்வு மையங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்படக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. ஏனென்று சொன்னால், தேர்வு நடைபெறும் சமயங்களில் மாணவ, மாணவியரின் கவனம் படிப்பதில் தான் இருக்கும். அந்தத் தருணத்தில் மின் வெட்டு ஏற்பட்டால், குறிப்பாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டால் மாணவ, மாணவியர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் அவர்களுடைய கவனமும் சிதறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, மின் வெட்டு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மின் வெட்டினால், மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் குறைந்துவிட்டன என்ற நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்த அரசிற்கு உள்ளது.
எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில், தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment