Last Updated : 06 May, 2022 07:32 AM

9  

Published : 06 May 2022 07:32 AM
Last Updated : 06 May 2022 07:32 AM

அரசியல் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்பதே இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்பு: அண்ணாமலை நேர்காணல்

சென்னை

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்பது இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு தொலைபேசி வாயிலாக சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

உங்களுடைய திடீர் இலங்கை பயணத்துக்கான காரணம்...?

இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக எனக்கு இருந்தது. அதுவும், கட்சி சார்பான பயணமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினப் பேரணியில் பங்கேற்க அழைப்பு வந்ததும், எங்கள் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இலங்கை சென்றேன். மலையகத் தமிழர்களையும், வடகிழக்குப் பகுதிகளில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் சந்தித்தேன். இலங்கைக்கு பிரதமர் மோடி செய்துள்ள விஷயங்களை நேரடியாக பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இலங்கையில் வசிக்கக் கூடியதமிழர்களின் அரசியல், வாழ்வியல் நிலை எவ்வாறு உள்ளது?

இலங்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள், கொழும்பு தமிழர்கள், வடகிழக்குப் பகுதி இலங்கைத் தமிழர்கள் என 3 வகையில் உள்ளனர். மலையகத் தமிழர்கள், வீடு, நிலம், கூலி உயர்வு போன்ற உரிமைகளை கேட்டு வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள், இந்தியா - இலங்கை இடையே 1987-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் 13-வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிவருகின்றனர்.

1949-ம் ஆண்டு இலங்கை ஒருசட்டத்தைக் கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் காரணமாக 7 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை இல்லாமல் போய்விட்டது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியுரிமை பெற்று கடினமான பாதைகளைக் கடந்து மலையகத் தமிழர்கள் வந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்நாட்டுப் போருக்கு பிறகு, 42 ஆயிரம் ராணுவத்தினரை அங்கு நிறுத்தி இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி, அந்தப் பகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதற்காக வடகிழக்குப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்களுக்கு 46 ஆயிரம் வீடுகள், மலையகத் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் என மொத்தம் 60 ஆயிரம் வீடுகள், யாழ்ப்பாண கலாச்சார மையம், துறைமுகம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்தியா செய்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த இலங்கையை இந்தியா வற்புறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியா - இலங்கை இடையே விமானம், கப்பல் மூலமாக துரிதப் போக்குவரத்து இருக்க வேண்டும், இலங்கையிடம் இந்தியா பேசி, அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்பது யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரை இன்னும் அதிகமான வீடுகளை இந்தியா கட்டித் தர வேண்டும், தொழிலாளர்களுக்கு கூலியை அதிகமாகக் கொடுக்க இலங்கையை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

இலங்கை சுற்றுப்பயண அனுபவத்தை பிரதமரைச் சந்தித்து கூற உள்ளீர்களா?

பயண அனுபவம், நான் சந்தித்த மக்கள், அவர்கள் வைத்த கோரிக்கைகளை அறிக்கையாகத் தயாரித்து, கட்சியின் தேசியத் தலைவருக்கு அனுப்பிவிடுவேன். அதில், தமிழக பாஜகவின் நிலைப்பாடு, நாம் என்ன எதிர்பார்க்கிறோம், என்ன சொல்லி உள்ளோம் என்பன உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆளுநர் - முதல்வர் இடையே மோதல்கள் நடை பெறுவதற்குக் காரணம்?

ஒரு பக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அது, மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்கான ஆரோக்கியமான அரசியலாக உள்ளது. அந்த அரசியலுடன் இவர்களால் போட்டிபோட முடியவில்லை. அதனால், விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர். ஆளுநர் என்ற அரசியல் சாராதவரை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக பாஜகவில் புதியவர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பளித்தது ஏன்?

கட்சி உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பழைய தலைவர்களுக்கு வேறு பொறுப்புகளில் வாய்ப்பளிக்க வேண்டும், இது தொடர்ச்சியாக நடக்கக் கூடிய மாற்றம்தான்.

பாஜகவின் வளர்ச்சிக்காக தருமபுரம் ஆதீன விவகாரத்தை கையில் எடுத்துள்ளீர்களா?

எங்கே அநியாயம் நடந்தாலும் தமிழக பாஜக அங்கே இருக்கும். தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியல் என்று சொல்லிக் கொண்டு, மதம் சார்ந்த அரசியலை இவர்கள்தான் செய்கிறார்கள். பாஜக அப்படி கிடையாது. நாளை கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலும் பாஜகதான் முதலில் குரல் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x