Published : 06 May 2022 04:44 AM
Last Updated : 06 May 2022 04:44 AM
சென்னை: கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் என்ன சிரமம் உள்ளது? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் சில கிறிஸ்தவ அமைப்புகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. கட்டாய மதமாற்ற சர்ச்சையில் கடந்தாண்டு தஞ்சாவூரில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஏப்.12 அன்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி பள்ளியில் கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மாணவியை முட்டிபோட வைத்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறது.
மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றன. அப்படியிருந்தும் சில கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த கிறிஸ்தவ அமைப்புகளுக்கு ஆதரவான அரசு தமிழகத்தில் அமையும்போதெல்லாம் இந்துக்களி்ன் உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன.
ஏனெனில், தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், ஜாமீனில் வெளியே வந்தபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி சென்று வரவேற்றதன் மூலம் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இந்த அரசு எந்த வகையில் ஆதரவாகச் செயல்படுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
மத விவகாரங்களில் மாநில அரசு நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். கன்னியாகுமரி, திருப்பூர் போன்ற இடங்களில் நடந்த மதமாற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘மனுதாரர் குறிப்பிட்டுள்ள திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடந்ததாகப் புகார் இல்லை. அவ்வாறு புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனுவில் எந்தப் பள்ளியில், எந்த தேதியில் கட்டாய மதமாற்றம் நடந்துள்ளது போன்ற விவரங்கள் எதுவும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவது தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும், மதமாற்றம் செய்வது என்பது உரிமை அல்ல. மனுதாரர் கோரியுள்ளபடி கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது?’’ என கேள்வி எழுப்பி, இந்த வழக்கின் விரிவான வாதத்துக்காக இன்றைக்கு (மே 6) தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT