Published : 10 May 2016 08:18 AM
Last Updated : 10 May 2016 08:18 AM
திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலச் செயலாளர் வி.பி.ராஜன். 1989-ல் ராஜபாளையம் தொகுதியில், மத்திய அமைச்சராக இருந்த அருணாசலத்தை எதிர்த்து நின்று வென்றவர். இதே தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்ற வி.பி.ராஜன் தனது தேர்தல் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
சுவர் விளம்பரம் எழுதுறதுக்கு இப்ப இருக்கிற தடை எல்லாம் அப்ப கிடையாது. அங்கங்க இருக்கிற கட்சிக்காரங்க கண்ணுல பட்ட சுவரை எல்லாம் ரிசர்வேஷன் போட்டு வச்சுருவாங்க. வேட்பாளர் பெயரை அறிவிச்சதும் அவங்களே காவி மண்ணை எடுத்து பெயர்களை எழுத ஆரம்பிச்சிருவாங்க. எனக்கும் அப்படித்தான் எழுதுனாங்க. அப்ப தங்கபாண்டியன் மாவட்டச் செய லாளரா இருந்தாரு. குடிசைவாசியான எனக்கு சீட் வாங்கிக் கொடுத்தது அவருதான். ‘செலவுக்கு பண மில்லையே’ன்னு சொன்னப்ப, ஐம்பதாயிரத்தை எடுத்துக் கொடுத்து, ‘இத வைச்சு வேலைகள பாரு, படிப்படியா பணம் வரும்’னு சொன்னாரு தங்கபாண்டியன்.
அதுபடியே அப்பப்ப தலைமை யிலருந்து பணம் கொடுத்தாங்க. மத்திய அமைச்சரா இருந்தவர எதிர்த்து நிக்கிறேன்னு சொல்லி தலைமைக்கிட்ட கூடுதலாவே பணத்தைக் கேட்டு வாங்கினேன். அதுமாத்திரமில்லாம, வாக்குக் கேட்டுப் போற இடங்கள்ல மக்களும் ஆரத்தி எடுத்து பணம் குடுத்தாங்க. எல்லாமுமா சேர்த்து ஏழு, எட்டு லட்சம் செலவாகி இருக்கும்.
தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், ஸ்டாலின், நெப்போலியன் எல்லாரும் எனக்காக வந்து பிரச்சாரம் பண்ணுனாங்க. இப்பெல்லாம் சில கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளர் போன பாதையில நம்மாளு போனாலே குத்தம்னு நினைக்கிறாங்க. ஆனா, அப்போ அப்படி இல்லை. ஐயா அருணாசலமும் நானும் பல இடங்களில் நேருக்கு நேர் சந்திச்சிருக்கோம். ‘ஐயா வணக்கம்’னு சொல்லுவேன். பதிலுக்கு அவரும், ‘தம்பி நல்லா இருக்கியா?’ன்னு நலம் விசாரிப்பார். அந்த நாகரிகம் எல்லாம் இப்ப இல்லாம போச்சே.
ரிசல்ட் வந்த அன்னைக்கி சாயந்தரம் தலைமையிலருந்து என்னைய போனில் கூப்பிட்டு ‘நீங்க என்ன ஜாதி?’ன்னு விசாரிச்சாங்க. இந்தத் தகவல் தெரிஞ்சதும், வி.பி.ஆர். அமைச்சராகப் போறார்னு செய்தி பரவிருச்சு. ஆனா, கடைசி நேரத்துல எனக்குப் பதிலா தங்கவேல் அமைச்சராகிட்டார். அப்போதைக்கு அது பெரிய ஏமாற்றமா இருந்தாலும் சாமானியனான நமக்கும் நாலு முறை கட்சி வாய்ப்புக் குடுத்துச்சேங்கிற திருப்திதான் இப்ப வரைக்கும் என்னை விசுவாசமான திமுககாரனா ஓட வைச்சிக்கிட்டு இருக்கு’’ என நெகிழ்ச்சியுடன் சொன்னார் வி.பி.ராஜன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT