Published : 06 May 2022 04:09 AM
Last Updated : 06 May 2022 04:09 AM

தமிழகத்தில் மாம்பழ உற்பத்தி 50 சதவீதம் வீழ்ச்சி - தரமான பழங்கள் இல்லாததால் விலையும் இல்லை

மதுரை: தமிழக தோட்டக்கலைப் பயிர்களில் சுவையும், மனமும் மிகுந்த மாம்பழங்கள் முக்கியமானவை. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் உற்பத்தியாகும் மாம்பழங்களுக்கு உள்நாட்டு சந்தைகள் முதல் சர்வதேச பழச்சந்தைகளில் நல்ல வரவேற்பு உண்டு.

தமிழகத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் மாங்கூழ்கள் 62 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. 60 சதவீதம் பழங்கள் வெளிநாட்டு சந்தைகளை மையப்படுத்தியும், மீதமுள்ள 40 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் தமிழகத்தில் மா சாகுபடி நடக்கிறது. இந்த மரங்களில் இருந்து ஆண்டுக்கு 5.3 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன.

மதுரை மாவட்டத்தில் 8,500 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரியாகவும், 400 ஹெக்டேரில் ‘அடர் நடவு’ முறையிலும் (நெருக்கமாக) மா விவசாயம் நடக்கிறது. ‘மா’ பழங்களில் இமாம்பசந்த், செந்தூரா, காசா லட்டு, கல்லாமை, பங்கனப்பள்ளி, காலப்பாடு, அல்போன்சா போன்ற ரகங்கள் முக்கியமானவை. இதில், இமாம்பசந்த் ரகம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழம். இந்த ரக பழங்களை சாப்பிடுவோர் மற்ற ரகங்களை சாப்பிட மாட்டார்கள். ‘மா’ ரகங்களை பொறுத்தவரையில், நல்ல மண் வளமும் சீதோஷனநிலையும் கொண்ட மதுரை அழகர்கோயில் பகுதியில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு மா விளைச்சல் அமோகமாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டும் அதன் விளைச்சலும் விலையும் சிறப்பாக இருக்கும் என நினைத்தனர். ஆனால், விளைச்சல் 50 சதவீதம் குறைந்ததோடு விலையும் எதிர்பார்த்த நிலையில் இல்லாததால் மா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதனால், மதுரை மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் இன்னும் முக்கிய ரக மா பழங்கள் விற்பனைக்கே வரவில்லை. வரும் பழங்களும் தரமாகவும், சுவையாகவும் இல்லாததால் கோடை சீசன் மாம்பழங்கள் விற்பனை மந்தமடைந்துள்ளது. அதனால், வியாபாரிகள் எதிர்பார்த்த விலைக்கு மா பழங்களை எடுக்காததால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அழகர்கோயில் சாம்பிராணிப்பட்டி மா விவசாயி எம்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு காய்ப்பு திறன் 50 சதவீதம் மட்டுமே இருக்கிறது. விலையும் கடந்த ஆண்டு போல் இல்லை. குறைவான விலைக்குதான் வியாபாரிகள் எடுக்கின்றனர். விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள், கல்லாமை ரூ.20, இமாம்பசந்த் ரூ.90, பங்கனப்வள்ளி ரூ. 45, அல்போன்சா ரூ.25 முதல் ரூ.30, பாலாமணி ரூ.30 முதல் ரூ.35 வரை எடுக்கிறார்கள். அவர்கள் இந்த பழங்களை இரு மடங்கு விற்பனை செய்கின்றனர். நாங்கள் பழுக்கும் தருவாயில் உள்ள காயாகதான் பறித்து கொடுப்போம். அவர்கள், அதை பழுக்க வைத்து விற்பனை செய்கிறார்கள்.

25 ஆண்டு வயதுள்ள ஒரு மரத்தில் 1/2 டன் மாங்காய்கள் காய்க்கும். 10 வயதுள்ள மரத்தில் டன் 1/4 டன் காய்க்கும். ஆனால், இந்த மரங்கள் இந்த அளவிற்கு காய்க்கவில்லை. கிருஷ்ணிகிரி , சேலம் மாவட்டங்களில் உள்ள ஜூஸ் தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். அவர்கள் கல்லாமை பழங்களை மட்டும் எடுப்பார்கள். அவர்கள் எடுத்தால் அந்த பழங்கள் ஒரளவு விலை கிடைக்கும். கடந்த ஆண்டு மழைக் காலங்களில் அதிக மழை பெய்தது. அதனால், மரங்கள் பூ பூக்கும் தன்மை குறைந்தது. எதிர்பார்த்த கோடை தாமதமாக பெய்ததால் பூப்பிடித்த மரங்களில் காய் காய்க்காவில்லை. மா விவசாயத்திற்கு அளவான மழைதான் தேவை. அது இல்லாததால் மா விவசாயம் இந்த ஆண்டு எதிர்பார்த்தளவு கை கொடுக்கவில்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x