Published : 06 May 2022 02:12 AM
Last Updated : 06 May 2022 02:12 AM
மதுரை: கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான நிலையில் மதுரையில் உள்ள சிக்கன் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், குளிர்சாதனப்பெட்டிகளில் பழைய கெட்டுப்போன சிக்கன் வைத்திருந்தது தெரியவந்தது.
தமிழத்தில் எந்த ஊருக்கு போனாலும் அந்ததந்த ஊர்களுடைய ‘ஸ்பெஷல்’ உணவுகளை சாப்பிடுவது உணவுப் பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும். அப்படி சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மதுரை அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள ஒவ்வொரு ஹோட்டல்களிலும் பல்வேறு பிரத்யேகமான அசைவ உணவு வகைகள் இருக்கின்றன. தற்போது மதுரையில் பாரம்பரிய உணவு வகைகளை தவிர நவீன பாஸ்ட் புட் இறைச்சி உணவகங்கள் எண்ணிக்கையும் பெருகிவிட்டது.
அந்த வகையில் மதுரையில் மூலைக்கு மூலை பர்கர், கிரில் சிக்கன் விற்பனை செய்யும் சிக்கன் ஷவர்மா கடைகள் அதிகமாக உள்ளது. மசாலா தடவிய ஃபோன்லெஸ் சிக்கன் தொங்கவிடப்பட்ட ராடு, அதனை சுற்றி அடுப்பில் எரியும் நெருப்பில் வெந்து கொண்டு இருக்கும். இந்த வகை கிரில் சிக்கன், பர்கர் சிக்கன்கள் இந்த தலைமுறையினருக்கு பிடித்த பிடித்த உணவாக மாறிவிட்டது. இந்த வகை சிக்கன் தயார் செய்து வழங்கும் ஷவர்மா அசைவ கடைகள் தற்போது மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் வடக்கு கேரளாவில் காசர்கோடு அருகே சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியானார். அதே கடையில் சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனால், தமிழக அரசும், அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சிக்கன் ஷவர்மா கடைகளை ஆய்வு செய்யும்படி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயவீர பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மதுரை மாநகரில் உள்ள 52 ஷவர்மா சிக்கன் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ‘திடீர்’ சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 5 கடைகளில் கெட்டுபோன பழைய சிக்கனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சமைத்த இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது , சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகளில் அதிக வண்ணம் சேர்க்கக் கூடாது உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அவர்களை எச்சரித்தனர். உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயவீரபாண்டியன் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT