Published : 05 May 2022 11:07 PM
Last Updated : 05 May 2022 11:07 PM
திருச்சியில் நடந்த வணிகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், "கரோனா காலத்தில் ஊரடங்கு, கடைகளைத் திறக்க முடியாத ஒரு கொடுமை, அந்தச் சூழல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக, நிதி உதவி வழங்கியிருக்கக்கூடிய வணிகர்களே உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்முடைய தமிழகத்தின் சார்பில், தமிழக அரசின் சார்பில் உதவி செய்வதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அந்தப் பணியை நாம் தொடங்கியிருக்கிறோம். அதற்கும் நீங்கள் உதவ வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பேற்று அனைத்து காலக்கட்டத்திலும் வணிகர்களின் நலனைக் காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசாகச் செயல்பட்டு வந்துள்ளோம் என்பதை நீங்கள் யாரும் மறக்க மாட்டீர்கள். கடந்த தேர்தல் அறிக்கையில், வணிகர்களின் நலனைக் காப்பதற்காக வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு அதனால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அதிகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே புதிய நலத் திட்ட உதவிகள் வணிகர் நல வாரியத்தால் வணிகப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்ற நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தவர் கலைஞர் தான். அதைப் பின்பற்றியே இன்றைய ஆட்சியும் நடந்து வருகிறது.
ஜிஎஸ்டி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தாங்கள் எதிர்கொள்ளும் சில சிரமங்கள் குறித்து வணிகர்கள் அப்போது எடுத்துரைத்தனர். உள்நாட்டு வணிகத்தில் உள்ள வரி சிரமங்கள் குறித்த வணிகர்களின் கருத்துக்கள் அவ்வப்போது பெறப்பட்டு ஜிஎஸ்டி மாமன்றத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. வணிகர்கள் ஜிஎஸ்டி சேவைகள் இணையவழிச் சேவைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழிலும் அவை தரப்பட வேண்டும் என்று வணிகர்கள் பெருவாரியாக கோரிக்கை வைத்தார்கள்.
அக்கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி சேவைகள் தமிழிலும் வழங்கப்படலாம் என்று இன்றைக்கு நாம் கடிதம் எழுதியிருக்கிறோம். விரைவில் ஜி.எஸ்.டி சேவைகள் தமிழிலும் வழங்கப்படும் என்று நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, வரி கைவிடுதல் ஆய்வுக் குழு துவக்கப்பட்டு மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டு, 66 வரி கைவிடுதல் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு, 65 இனங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
வணிக வரி ஆணையரின் தலைமையில், மாநில அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழுவும் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழுவும் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்த பின்னர், இத்தகைய வரிச்சலுகைகளை மாநில அரசுகள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டபோதிலும், இந்த வரிவிதிப்பு முறையில் வணிகர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை வரும்போதெல்லாம், ஜிஎஸ்டி மன்றத்தில் எதிர்த்தும், மாற்றியமைத்தும் வணிகர்களின் நலன் காப்பதில் திமுக அரசு என்றைக்கும் முன்னணியில் இருந்து வருகின்றது.
அதுமட்டுமல்ல, வணிகர்களுக்கு எந்தவிதத் தொல்லையும் இருக்கக்கூடாது. இந்த மாநாட்டிற்கு நான் வருவதற்கு முன்பு தமிழகக் காவல்துறையின் தலைவர் டி.ஜி.பி. உடன் ஆலோசனை செய்தேன். அதன் விளைவாக, சில வாரங்களுக்கு முன்பு நான் அறிமுகம் செய்து வைத்த 'காவல் உதவி செயலி'-இல் வணிகர்கள் உதவி என்ற ஒரு புதிய பகுதியும் அதில் சேர்க்கப்படும். வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுக்க நேரிட்டால், செயலியில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் புதிய பகுதியில் காவல்துறையின் உதவியை நீங்கள் கோரலாம். உடனடியாக ரோந்து வாகன காவலர்கள் விரைந்து வந்து தகராறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக எடுப்பார்கள். வணிகர்களை பாதுகாக்கின்ற இந்த வசதி இன்னும் ஓரிரு வாரத்தில் துவங்கப்போகிறது.
என்னுடைய தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய வணிகர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறேன். இதனால், வாரியத்துக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு அனைத்து நலத்திட்டப் பணிகளும் முடுக்கி விடப்படும். வணிகர் நல வாரியத்தின் மூலமாக, இப்போது வழங்கப்பட்டு வரும் உறுப்பினர்களின் இறப்புக்கான குடும்பநல இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்துகளில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி இழப்பீடு 5,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக இடங்களில் நிலவி வரும் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கை வழிமுறைகளை வகுக்க, நகராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது வணிக நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக உரிமம் எடுக்கப்பட வேண்டும் என்ற அந்த நிலையை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் உரிமம் எடுப்பதற்கான திருத்தங்கள் கொண்டு வரப்படும். உடற்பயிற்சிக் கூடங்களுக்கு, இனிமேல் காவல்துறையின் உரிமம் தேவையில்லை. பாலங்கள், மெட்ரோ இரயில் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகிற நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்டுக் கடைகளை இழக்கக்கூடிய வணிகர்களுக்கு, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக வாடகைக் கடைகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த அரசு என்பது, நான் நேற்றைக்குக்கூட சட்டமன்றத்தில் பேசுகிறபோது சொன்னேன், ஏதேதோ சொல்லி களங்கத்தை ஏற்படுத்த யார் யாரோ திட்டமிடுகிறார்கள், அது நிச்சயம் பலிக்காது. காரணம், இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், திராவிட மாடலில் நடைபெறக்கூடிய ஆட்சி. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிய அரசாக சமூக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்திலும் ஒரே நேரத்தில் வளர்ச்சியை எட்ட நினைக்கக்கூடிய அரசு. பொருளாதார வளர்ச்சி குறித்து மட்டும் சிலவற்றை விரிவாக உங்களிடத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்.
பெரிய பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே பொருளாதார வளர்ச்சியாக நாங்கள் நினைக்கவில்லை. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் வளர வேண்டும், அதுதான் பொருளாதார வளர்ச்சி, அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். மிகப்பெரிய தொழிலதிபர்கள் வளர்ந்தால் மட்டும் போதாது, உங்களைப் போன்ற சிறுவணிகர்களும் வளர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும், அதுதான் திராவிட மாடல் ஆட்சி. பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறு கடைகள் வரைக்கும் வளர்ந்தாக வேண்டும். வளர்ச்சியை நோக்கியதாக எல்லா தொழில்களும் மாற வேண்டும்.
பெரிய தொழில்கள் செழிக்கும்போது சிறுதொழில்களும் வளரும். சிறு தொழில்கள் காலப்போக்கில் பெரும் நிறுவனங்கள் ஆகும். எனவே ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. ஒன்றின் வளர்ச்சியில் மற்றொன்றுக்கும் பங்கு உண்டு என்ற எண்ணத்தோடு வணிகர்கள் தங்கள் தொழிலில் முனைப்போடு ஈடுபட வேண்டும். தொழில் முதலீடுகளை வரவேற்கக்கூடிய அதே நேரத்தில் வணிகர்களின் நலன் நிச்சயமாக, உறுதியாக பாதுகாக்கப்படும். அந்த அளவுக்கு உற்பத்தி ஆற்றல் மிக்க மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT