Published : 09 Jun 2014 08:17 AM
Last Updated : 09 Jun 2014 08:17 AM

பெரம்பலூர் தொகுதிக்கு மறு தேர்தல்?: தமிழகம் முழுவதும் மறு தேர்தல் கோரி தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு!

பெரம்பலூர் தொகுதியில் வாக் காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதால் அதன் அடிப் படையில் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

சிவகாசியிலுள்ள ’கேலக்ஸி டிரஸ்ட்’டின் தலைவர் தமிழ்ச் செல்வன். கடந்த 6-ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தை சந்தித்த இவர், ’தமிழகத்தில் அனைத் துத் தொகுதிகளிலும் வாக்காளர் களுக்கு தாராளமாக பணம் கொடுக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையமோ பிற அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் ஜனநாயகம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தலை ரத்துசெய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பிரத்தியேகமாக பேசிய தமிழ்ச்செல்வன், ’’தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஆளும் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்து தேர்தல் முடிவுகளை மாற்றிவிட்டனர். இவர்கள் பணம் கொடுக்க ஏதுவாக தேர்தல் ஆணையமும் 144 தடையுத்தரவை அமல்படுத்தியது. தமிழக தேர்தல் களத்தில் 1000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

எனவேதான், மறு தேர்தல் நடத்தக் கோரி ஒரு சாதாரண இந்தியக் குடிமகனாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தைத் சந்தித்து புகார் கொடுக்க நேரம் கேட்டிருந்தேன். இதுதொடர்பாக நான் அனுப்பிய 2 மின் அஞ்சல்களுக்கு அவர் பதில் தரவில்லை. அவரது தனிச் செயலர் மல்ஹோத்ராவை தொடர்பு கொண்டு, ‘தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் கேட்டு நான் உங்களிடம் பிச்சை கேட்பதுபோல் காத்திருக்க வேண்டுமா?’ என்று கோபப்பட்ட பிறகுதான் 6-ம் தேதி மாலை 4 மணிக்கு என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார் சம்பத்.

எனது புகாரை மேலோட்டமாக கேட்டவர், ’மேற்கொண்டு இது தொடர்பாக தேர்தல் ஆணையத் தின் தலைமை இயக்குநர் (செலவினங்கள்) பி.கே.தாஸை பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பி.கே.தாஸிடம் தமிழகத்தில் நடந்த தேர்தல் கூத்துகள் அனைத்தையும் எடுத்து விளக்கினேன். ’ஒரு முன்னோடி திட்டமாகத்தான் தேர்தலின்போது தமிழகத்தில் 144 தடையுத்தரவை அமல்படுத்தினோம். ஆனால், அது எதிர்பார்த்த பலனை தர வில்லை. பெரம்பலூர் தொகுதி யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வலு வான ஆதாரம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் அடிப் படையில் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இதேபோல், மற்ற தொகுதி களிலும் முறைகேடுகள் நடந் திருப்பதற்கான ஆதாரங்களை நீங்கள் கொடுத்தால் அந்தத் தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உங்க ளுக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். இதற்கு தனி மனிதனான என்னால் எப்படி ஆதாரத்தை திரட்டிக் கொடுக்கமுடியும்?

பெட்ரோலிய அமைச்சகத்தில் ஏழாயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான புகாரை பிரதமர் அலுவலகத்தில் 9-ம் தேதி கொடுக்கப்போகிறோம். அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தித்தான் ஊழலை வெளிக்கொண்டுவர வேண்டும். அதேபோல் இந்த விஷயத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த நடவடிக்கை எடுங்கள்’ என்று கேட்டேன்.

அதற்கு தாஸ், ‘சி.பி.ஐ. விசாரணை கேட்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. வேண்டுமானால், நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பொதுநல வழக்குப் போடுங்கள்’ என்று சொன்னார். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் எங்கள் புகார் மீது இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறோம்’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x