Published : 05 May 2022 06:14 AM
Last Updated : 05 May 2022 06:14 AM
கூடலூர்: முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் 2 தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்க்கப்பட்ட பிறகு, வரும் 9-ம் தேதி முதல்முறையாக அணையில் ஆய்வு நடைபெற உள்ளது. இதில் தமிழக அதிகாரிகள் சார்பில் படகு இயக்கம் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட உள்ளன.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பெரியாறு அணையைக் கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் நாதன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
தற்போது இந்தக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள மாநிலம் சார்பில், அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, கண்காணிப்புக் குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது.
இதையடுத்து தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியம், கேரளா சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் சேர்க்கப்பட்டனர்.
தொழில்நுட்பக் குழுவினர் சேர்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக இந்தக் கண்காணிப்பு குழு வரும் 9-ம் தேதி(திங்கட்கிழமை) பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளது.
அன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழுவினரின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேக்கடியில் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருக்கும் தமிழன்னை படகை இயக்க அனுமதி கோருவது, பேபி அணையை பலப்படுத்த இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT