Published : 05 May 2022 06:12 AM
Last Updated : 05 May 2022 06:12 AM
மதுரை: நெய்வேலி என்.எல்.சி.யில் சமீபத்தில் 300 பேர் பணி நியமனம் செய்யப்பட்டதில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவருக்கு மட்டும் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாட் ஜோஷிக்கு சு. வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாவது: நெய்வேலி அனல் மின் கழகத்தில் (என்.எல்.சி) 300 பட்டதாரி நிர்வாகப் பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன்னறிவிப்பின்றி கேட் (GATE) மதிப்பெண்களை தேர்வு தகுதியாக மாற்றியதைக் கண்டித்தும், அதனால் இந்த தேர்வு முறைமையை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரியும், ஏற்கெனவே என்.எல்.சி. தலைவர் ராகேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
மேலும் இப்பதவிக்கான நியமனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இறுதித்தேர்வு பட்டியலில் இடம் பெறுவது அரிதாகிவருகிறது, ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரியிருந்தேன்.
தற்போது 300 பேர் கொண்ட நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அப்பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத் தேர்வு முறையை நிறுத்தி விட்டு, உரிய அவகாசத்துடன் தேர்வுத்தகுதிகளை அறிவித்து புதிய நியமனங்களை மேற்கொள்ள நெய்வேலி அனல் மின்நிலைய நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT