Published : 04 May 2022 08:55 PM
Last Updated : 04 May 2022 08:55 PM
சென்னை: "தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால், அரசின் தடையை மீறி பாஜக முன்நின்று பட்டினப் பிரவேசத்தை நடத்தும். நானும் அங்கே சென்று பல்லக்கை சுமக்க தயாராக இருக்கின்றேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையில் நிச்சயமாக அரசியல் உள்நோக்கம் உள்ளது. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தனை ஆண்டுகாலமாக அந்த ஆதீனம் தமிழக்கத்தில் இருந்து வருகிறார். இதற்குமுன் திமுக ஆட்சிக்காலத்தில் அதே ஆதீனம் இருந்துள்ளார். இதற்குமுன் 5 முறை கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பட்டினப் பிரவேசம் அங்கு நடந்துள்ளது. இவை அனைத்துமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு சரித்திர உண்மை.
தற்போது அண்மையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீன மடத்திற்கு சென்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு, ஆளுநரின் கான்வாயில் கல்வீச்சு தாக்குதல், அதன்பின்னர் ஆதீனம் குறித்து தவறான கருத்துகளை திமுகவின் கூட்டணி கட்சியினர் பேசுவது, அதன்பின்னர், பட்டினப் பிரவேசத்தை நடத்தக்கூடாது என்று கூறுவது. இதை பார்க்கும்போது இதில் அரசியல் காரணம் இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.
எனவே, இதுபோன்ற விபரீதமான முடிவுக்கு தமிழக அரசு செல்லாமல், காலங்காலமாக பாரம்பரியமாக என்ன நடந்துகொண்டு வருகிறதோ, எதற்காக தமிழக அரசு உள்ளே சென்று தடையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. பாஜக முன்நின்று பட்டினப் பிரவேசத்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். நானும் அங்கே சென்று பல்லக்கை சுமக்க தயாராக இருக்கின்றேன். எனவே, அரசு முடிவை மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால் அரசின் தடையை மீறி பட்டினப் பிரவேசத்தை பாஜக நடத்த தயாராக உள்ளது" என்றார்.
பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதித்தால், அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என்று ஜீயர் பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ”அது அவருடைய தனிமனித கருத்து. திமுகவில் உள்ள அமைச்சர்களெல்லாம் எப்படி? மணல் லாரி கடத்துபவரை, தண்ணீர் லாரி கடத்துபவரை எல்லாம் அமைச்சர் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். ஊடகங்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய திமுக செய்தித்தொடர்பாளரை நீங்கள் ஏன் எதுவும் கேட்கவில்லை" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT