Published : 04 May 2022 05:34 PM
Last Updated : 04 May 2022 05:34 PM
ராமேசுவரம்: இலங்கையிலிருந்து அகதியாக வந்த இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவலர் அன்பு என்பவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பெட்ரோல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் என அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 80 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஒரு இளம்பெண் உள்பட 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும (மெரைன்) போலீசார் விசாரணைக்கு பின், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்த அந்த இளம்பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.
அந்த அப்பெண்ணிடம் பழகி வந்த மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவலர் அன்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள வீட்டிற்குள் இரவு புகுந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்பெண் மறுத்ததையடுத்து அன்பு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்படி அன்புவிடம், கடலோர பாதுகாப்புக் குழும ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் விசாரித்தனர். விசாரணை அறிக்கை படி மாவட்ட காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அன்புவை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் புதன்கிழமை உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT