Published : 04 May 2022 02:03 PM
Last Updated : 04 May 2022 02:03 PM
சென்னை: இலங்கையில் வாழும் மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சி நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இலங்கை மக்கள், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தக் கோரி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள தமிழக மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
உன்ன உணவு, உடுத்த உடை மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இலங்கை மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு உதவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் இலங்கையில் வாழும் மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT