Published : 04 May 2022 01:00 PM
Last Updated : 04 May 2022 01:00 PM

'அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுக' - வைகோ வேண்டுகோள்

வைகோ | கோப்புப் படம்

சென்னை: நடப்பு கூட்டத் தொடரிலேயே ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. பல மாநிலங்களில் இன்னும் கிராமப்புறங்களில் மருத்துவர்
இருப்பை உறுதி செய்வதே சவாலாக இருக்கும்போது, தமிழகத்தின் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. இதற்கு, அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையும், உழைப்புமே காரணம் ஆகும்.

கரோனா பேரிடர் காலத்தில் நெருக்கடியான சூழலில் அரசு இயந்திரத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர்கள் அரசு மருத்துவர்கள் தான். தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது இக்கட்டான சூழலில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காக பல ஆண்டுகளாக
போராடி வருகின்றார்கள். கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவுதான்.

கடந்த 2019ம் ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய மாட்சிமை தாங்கிய தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு, திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்து இருந்தார்.

தற்போது திமுக-வின் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகின்றது. மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை எட்டுவதற்கும், தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் முதல்வர் முயற்சித்து வரும் சூழலில், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையையும் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின்போது, அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. 2009ம் ஆண்டில், கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354-ன் படி, நடப்பு கூட்டத் தொடரிலேயே ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு, தமிழக முதல்வரை மறுமலர்ச்சி திமுகழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x