Published : 04 May 2022 12:18 PM
Last Updated : 04 May 2022 12:18 PM

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமனம்

சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க முதலாம் ஆண்டு மாணவர்கள், தெரியாமல் சமஸ்கிருத உறுதி மொழி எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் மீண்டும் ரத்தினவேலுவை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர் சங்கம் கோரிக்கை வைத்து இருந்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒபிஎஸ்ஸும் இந்தக் கோரிக்கையை வைத்துதிருந்தார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து பேசிய அவர், ரத்தினவேலுவை மீண்டும் முதல்வராக நியமனம் செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், "மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ரத்தினவேல் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். அவர் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதல்வர் உத்தரவுப்படி மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x