Published : 04 May 2022 12:01 PM
Last Updated : 04 May 2022 12:01 PM
சென்னை: திருவண்ணாமலை விசாரணைக் கைதி தங்கமணி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவை இன்று (மே 4) மீண்டும் கூடியது. இந்துசமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். முன்னதாக, இன்று காலை 10 மணிக்கு பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கடந்த ஏப்ரல் 29 அன்று எதிர்க்கட்சித் தலைவர் இந்த அவையில் நேரமில்லா நேரத்தில் பேசியபோது, திருவண்ணாமலை சம்பவம் குறித்து இந்த அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்து நான் பேசியபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடற்கூராய்வு முடிந்த பின்பு, இந்த அவைக்கு அதனை நான் தெளிவுபடுத்துவேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுகுறித்த தகவல் என்னவென்றால், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர், தங்கமணி என்பவரின் மீது மது விலக்கு வழக்குப் பதிவு செய்து 26-4-2022 அன்று அவரைக் கைது செய்துள்ளனர். பின்னர், கிளைச் சிறைச்சாலையில் அவரை ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. 27-4-2022 அன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து, நீதித் துறை நடுவரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உடற்கூராய்வு முடிக்கப்பட்டது.
காவல் துறை வடக்கு மண்டலத் தலைவர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இறந்தவரின் உறவினர்களிடம் நடந்த சம்பவங்களையெல்லாம் கூறி, மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையெல்லாம் காண்பித்து விளக்கி, புலன் விசாரணை நியாயமாக நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தினர். இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கு விசாரணை மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு சிபிசிஐடி விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. தங்கமணியைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய காவல் துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள். மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையின் புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT