Published : 04 May 2022 07:39 AM
Last Updated : 04 May 2022 07:39 AM

குற்ற வழக்கில் கைதானவர்களிடம் இரவு நேரத்தில் விசாரணை நடத்தக் கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாதுஎன்று அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, வழிப்பறி,திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குபவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபடுபவர்களை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறுவார்கள். அதன் அடிப்படையில், குற்றம் செய்தவர்கள் என்றால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள். நிரபராதி என்றால்உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். சில குற்றவாளிகள் உண்மையை உடனே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே போலீஸார் அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தி உண்மையைப் பெறுவார்கள். சில நேரங்களில் போலீஸாரின் கடுமையான விசாரணை காரணமாக, சிலர் உடல்நலம் பாதிக்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

இதற்கிடையே, சமீபத்தில் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ்சந்திப்பில் வாகன சோதனையின்போது கஞ்சா மற்றும் கத்தியுடன் பிடிபட்ட விக்னேஷ் என்ற இளைஞரை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில்வைத்து விசாரணை நடத்தியபோது, உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கமணி என்பவரும் உயிரிழந்தார்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இந்த 2 பேரின் உயிரிழப்புக்கும் போலீஸார்தான் காரணம் என்று அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இந்த 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வருவதால் மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் டிஜிபி சைலேந்திரபாபு தனி கவனம் செலுத்தி வருகிறார்.

போலீஸ் காவலில் உள்ள கைதிகளிடம், எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும் என்பதுதொடர்பாக போலீஸாருக்குஅவர் ஏற்கெனவே சுற்றறிக்கை வாயிலாக அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ‘‘விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது. குற்றம் உறுதி செய்யப்பட்டால், கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்’’ என்று அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு (எஸ்.பி.) டிஜிபி சைலேந்திரபாபு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x