Published : 04 May 2022 07:58 AM
Last Updated : 04 May 2022 07:58 AM
திருச்சி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர்தினத்தையொட்டி, தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நாளை (மே 5) நடக்க உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு மாநிலபொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர்தினம் தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள திடலில் நடக்க உள்ளது.
பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். காலை 8.30 மணிக்கு கொடியேற்றம், தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. முற்பகல் 11 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்றி, முதுபெரும் வணிகர்களுக்கு வணிகச் செம்மல் விருது வழங்கி கவுரவிக்கிறார்.
இந்த மாநாட்டில் அகில இந்தியவணிகர்கள் சம்மேளன தேசியத் தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டுத் தீர்மானத்தை மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா முன்மொழிவார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் இதில் பங்கேற்கின்றனர். வணிகர்களின் நீண்டகால பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காணும் மாநாடாக இந்த மாநாடு அமையவுள்ளது. இது தமிழக வணிகர்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்தும் மாநாடாக அமையும்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் மே 5-ம் தேதிதங்களது கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து குடும்பத்தினர், ஊழியர்களுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT