Last Updated : 04 May, 2022 06:38 AM

 

Published : 04 May 2022 06:38 AM
Last Updated : 04 May 2022 06:38 AM

மதுரை ஆவினில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலை: குல்பி, வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்கள் தயாரிப்பு

ஆவின் வளாகத்தில் உள்ள புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை .

மதுரை: மதுரையில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பால் மூலம் குல்பி, வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச் வகையான ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது.

மதுரை அண்ணாநகரில் ஆவின் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பால் மூலம் பால்கோவா, நெய், தயிர், மோர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக் கப்படுகின்றன. இதனிடையே சென்னைக்கு அடுத்ததாக தென் மாவட்ட ஐஸ்கிரீம் நுகர்வோர் தேவையைப் பொறுத்து மதுரையில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, ஆவின் நிறுவன வளாகத்தில் ரூ.65.89 கோடியில் சுமார் 5 ஏக்கரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில் இத்தொழிற்சாலை அமைக்கப் பட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு, பால் கொள்முதல், பார்சல் எனத் தனித்தனி அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் ஐஸ்கிரீம் தயாரிப்பை கடந்த மாதம் 10-ம் தேதி காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து ஐஸ்கிரீம் தயாரிப்பு நிலைய பொதுமேலாளர் கிரிதர், உதவி பொது மேலாளர் அனுமந்தராவ் கூறியதாவது:

ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் மூலம் பல்வேறு வகையான ஐஸ்கிரீம் தயாரிக்கும் திறனுடன் இத்தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 10 ஆயிரம் லிட்டர் பால் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. குல்பி, வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச் வகையான ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் ஐஸ் கிரீம் மதுரை, திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட இடங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. தேவைக்கேற்ப மேலும் பல வகையான ஐஸ்கிரீம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மூன்றாவதாக சேலத்தில் விரை வில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x