Published : 03 May 2022 06:34 PM
Last Updated : 03 May 2022 06:34 PM

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு | செல்போனுக்கு தடை, தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு - முழு விவரம்

சென்னை: 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வெழுத வரும் மாணவர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மே 2022 பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே 5-ம் தேதியன்று தொடங்கி மே 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மே 10-ம் தேதியன்று தொடங்கி மே 31-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மே 6-ம் தேதியன்று தொடங்கி மே 30-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8,37,311 மாணவ மாணவிகளும், பிளஸ் 1 பொதுத் தேர்வை 8,85,053 மாணவ மாணவிகளும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9,55,139 மாணவ மாணவிகளும் எழுதுகின்றனர். சென்னையில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 46,785 மாணவ மாணவியரும், பிளஸ் 1 பொதுத் தேர்வை 47,121 மாணவ மாணவியரும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 46,932 மாணவ மாணவியரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் எழுதவுள்ளனர்.

பிளஸ் 2 : அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம்5,03,745 மாணாக்கர்களில் 2,74,332 மாணவிகளும், 2,29,413 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 2,70,799 மாணாக்கர்களில் மாணவிகள் 1,39,382 மாணவர்கள் 1,31,417 ஆவர். கலை (Arts) பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 14885 மாணாக்கர்களில் 7657 மாணவிகளும், 7,228 மாணவர்களும் தேர்வெழுத உள்ளனர். தொழிற்கல்வி பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 47,882 மாணாக்கர்களில் மாணவிகள் 17,625 மாணவர்கள் 30,257 தேர்வெழுதவுள்ளனர் .

சிறையில் தேர்வு மையம்:10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையங்களில் சிறைவாசிகள் தேர்வெழுதவுள்ளனர்.

மாற்றுத் திறனாளி தேர்வர்கள்: 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் டீஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) உள்ளிட்ட சலுகைகள் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்குத் தேர்வு மையங்களில் தரைத்தளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 3,638 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் 5,299 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 7,470 மாற்றுத் திறனாளி
தேர்வர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. அரசாணையின்படி சலுகை வழங்கப்படும் என்ற அறிவுரை அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டிலேயே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு: பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் ஆகியோருக்குத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன்மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்காக சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாட்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளின் மூலமாகவே படித்து அறிந்துக் கொள்ளலாம்.

விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாள்கள்: அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் மற்றும் முகப்புத்தாள்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. தேர்வின் போது தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள்கள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்வர் முகப்புத்தாளில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளுக்கு 279 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 308 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஆவன செய்யுமாறு மின்சார வாரியத் தலைவருக்குக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வினை எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காவண்ணம் செம்மையாக நடத்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வுப் பணிகளில் எவ்வித சுணக்கமுமின்றி பொறுப்புடன் செயலாற்றுமாறு அனைவருக்கும் அறிவுரைகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்: அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவரவர்களது மாவட்டங்களில் அவரவர் எல்லைக்குட்பட்டத் தேர்வு மையங்களை திடீர் பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் எதுவும் நடைபெறா வண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட உரிய அரசாணை பெறப்பட்டு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4291 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் (Flying Squad and Standing Squad) முதன்மைக் கல்வி அலுவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆய்வு அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர், அம்மாவட்டத்திலுள்ள அனைத்துத் தேர்வு மையங்களையும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு தேர்வு நாட்களின்போது தங்களுடன் கண்காணிப்புக் குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செல்போன் தடை:தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும் தேர்வர்களது செல்போன்கள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில்
தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுங்கீனச் செயல்பாடுகள்: தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ / பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும்.

மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ / ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திட பள்ளிக் கல்வி/மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வுக்கட்டுபாட்டு அறை அமைத்தல்: மே 5-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடைபெறவுள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொண்டு பயன்பெற்றிட தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டுப்பாட்டு அறையை 9498383081 மற்றும் 9498383075 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x