Published : 03 May 2022 01:21 PM
Last Updated : 03 May 2022 01:21 PM
மதுரை: "உயிரே போனாலும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம், நானே பல்லக்கை எனது தோளில் சுமப்பேன்" என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வரும் மே 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று (மே 3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாரம்பரியமிக்க தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்வு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் நடந்தது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் நடந்துள்ளது. பாரம்பரியமாக நடந்த இந்த பட்டினப் பிரவேசத்தை திடீரென நிறுத்துவது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. முதல்வராக பொறுப்பேற்கும்போது ரகசிய பிரமாணம் எடுப்பதுபோலத்தான், பட்டினப்பிரவேசமும் பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்துவது வருத்தமளிக்கிறது. முறைப்படி நடப்பதை தடுக்கக்கூடாது.
திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்தார். நான் அந்த மடத்தின் சிஷ்யன். தருமபுரத்தில் நான் படித்துள்ளேன். தருமபுரம் ஆதீனம்தான் எனக்கு சோறு போட்டு வளர்த்தது. நான் இன்று தேவாரம் பற்றி பேசுவதற்கு தருமபுரம் ஆதீனம்தான் காரணம். தருமபுரம் ஆதீனம் போட்ட பிச்சைதான் நான் இன்று தமிழ்பேசுகிறேன். அந்த ஆதீனப் பல்லக்கை நானே தோளில் சுமப்பேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை, நடத்தியே தீர்வோம். இதன்மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்வர் நேரில் வந்து இந்நிகழ்வை நடத்தவேண்டும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT