Published : 22 May 2016 09:15 AM
Last Updated : 22 May 2016 09:15 AM

5 ஆண்டுகளில் 272 முறை அபாய சிக்னலை தாண்டிய விரைவு ரயில்கள்: பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - வேலைச்சுமையால் சோர்வடையும் ரயில் ஓட்டுநர்கள்

சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும், கனமழையாக இருந்தாலும் தொடர்ந்து 12 மணிநேரம் இடை வெளி இல்லாமல் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்களின் நிலை பரிதாபகரமாகிவிட்டது. சமீப கால மாக வேலைச்சுமை அதிகரித்துள்ள தால் சோர்வடையும் ரயில் ஓட்டுநர் களால் கடந்த 5 ஆண்டுகளில் விரைவு ரயில்கள் 272 முறை அபாய சிக்னலை (சிவப்பு சிக்னல்) தாண்டியுள்ளன.

இந்திய ரயில்வே துறையில் 12 ஆயிரம் பாசஞ்சர் ரயில்கள் உட்பட மொத்தம் 21 ஆயிரம் ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் இருந்தாலும், ஓட்டு நர்கள் பிரிவில் காலிப் பணியிடங் கள் அதிகரிப்பது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஓட்டுநர் பிரிவில் 21.42 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் உள் ளன. அதாவது 20 ஆயிரத்து 856 இடங்கள் காலியாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்னலை கடந்த ரயில்கள்

மொத்தம் உள்ள 14 மண்டலங் களில் வடக்கு ரயில்வேயில்தான் அதிகபட்சமாக 2,765 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், தற்போதுள்ள ரயில் ஓட்டுநர்களுக்கு வேலைச்சுமை ஏற்பட்டுள்ளது. இடைவெளி இல்லாமல் ரயில் ஓட்டுநர்கள் 14 மணி நேரம் வரை பணியாற்றுவதால் சோர்ந்து விடுகின்றனர். இதனால், கவனக் குறைவு ஏற்பட்டு சிவப்பு சிக்னல் களை கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், ரயில்கள் தடம்புரளுதல் உட்பட பல்வேறு விபத்துகளுக்கு முக்கிய காரண மாக இருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 272 முறை விரைவு ரயில்கள் அபாய சிக்னல்களை தாண்டியது தெரியவந்துள்ளது. இதில், அதிக பட்சமாக கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் 58 முறை இவ்வாறு நடைபெற்றுள்ளது. விரைவு ரயில் கள் அபாய எல்லையை கடந்து செல்வதன் மூலம் விபத்து நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் பட்டாபிராமில் நடந்த விபத்துக்கும் சிவப்பு சிக்னலை கடந்து சென்றதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகத்தின் சென்னை மண்டல தலைவர் வி.பாலசந்திரன், இணை செயலாளர் கே.பார்த்தசாரதி ஆகி யோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரயில் ஓட்டுநர்களின் வேலை மற்றும் ஓய்வு நேரம் குறித்து ரயில் ஓட்டுநர்கள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தால் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கோரிக்கை கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு டிசம்பரில் ரயில்வே அமைச்சரும், ரயில்வே வாரிய தலைவரும் அறிவித்தனர். இதையடுத்து, ரயில்வே வாரியம் சமீபத்தில் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதில், வேலை மற்றும் ஓய்வு நேரம் பற்றிய பரிந் துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எனவே 6 மணி நேரம் வேலை, இரவுப் பணி 2 நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது, 46 மணி நேரம் வார ஓய்வு, விபத்துகள் இல்லாத வேலை சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை ஆகியவற்றை வலி யுறுத்தி தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், எங்களின் கோரிக்கை குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. போதிய ஆட்களை நியமித்து பணிச் சுமையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்ஜினில் கழிப்பறை இல்லாத அவலம்

இந்தியாவில் 163 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் பயணிகள் செல்லும் பெட்டிகளில் மட்டுமே இதுவரையில் கழிப்பறை வசதி உள்ளது. ஆனால், ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதி இல்லாத சூழல்தான் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில் இந்த அடிப்படை வசதிகூட இல்லாததால் நாங்கள் படும் வேதனையை சொல்ல முடியாது.

முன்னோட்ட முயற்சியாக ஓரிரு விரைவு ரயில்களின் இன்ஜின்களில் கழிப்பறை வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி மற்ற இன்ஜின்களுக்கு எப்போது வரும் என தெரியவில்லை என்று ரயில் ஓட்டுநர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x