Published : 03 May 2022 06:30 AM
Last Updated : 03 May 2022 06:30 AM
உடுமலை: உடுமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணை 1958-ல் கட்டப்பட்டது. அணை உருவாக்கப்பட்டபோதே, தொலைநோக்குடன் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அந்த வகையில், அணையின் முகப்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. சிறுவர்களை கவரும் வகையில் விலங்கியல் பூங்கா, விளையாட்டு பூங்கா தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டன.
சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம் என பரந்த இடப்பரப்பை கொண்டது.சுற்றுலாப் பயணிகளுக்கு ரம்மியமான சூழலை கொண்டுவர பூச்செடிகள், நடைபாதைகள், செயற்கை நீரூற்றுகள், புல் தரைகள், விலங்குகளின் சிலைகள்,நிழல் தரும் மரங்கள் ஆகியவைஏற்படுத்தப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பு வருகை தந்தனர். அதேபோல விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள் என ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் அமராவதி அணையை பார்வையிட வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பூங்கா பராமரிப்புக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், பாழடைந்து பாலைவனம்போலவும், புதர்மண்டியும் காணப்படுகிறது. இதனால் விஷ பாம்புகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது.
துருப்பிடித்த நிலையில் செயற்கை நீரூற்றுகள், காய்ந்துபோன நிலையில் பூச்செடிகள், சிதைந்து கிடக்கும் பயணிகள் இருக்கைகள், சிதிலமடைந்த சிலைகள் என அனைத்தும் வீணாகி உள்ளன. சிறுவர் விளையாட்டு பூங்காவில் எந்தவித பராமரிப்பு பணிகளுமே செய்யப்படவில்லை. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன.
விலங்குகள் பூங்காவில் இருந்தமான், அணில், முயல், குரங்கு,பாம்புகள், ஆமை, புறா, வாத்து உள்ளிட்டவை பராமரிப்பின்றி வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. அமராவதி அணை பூங்கா பொலிவிழந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து, வருவாயும் குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, "ரூ.1 கோடி மதிப்பில் பூங்காவை பராமரிக்க திட்டம் தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைத்து 10 ஆண்டுகளாகிறது.
ஆனாலும், நிதி ஒதுக்கப்படவில்லை. சுற்றுலா துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறியும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT