Published : 16 May 2016 02:09 PM
Last Updated : 16 May 2016 02:09 PM
புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர். காங்கிரசுக்கு மக்கள் வெற்றியை அளிப்பார்கள் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பா.ம.க., மக்கள் நல கூட்டணி என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுதவிர நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட திலாசுபேட்டை அரசு ஆண்கள் நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் ரங்கசாமி வாக்களித்தார்.
இதற்காக தனது வீட்டில் இருந்து மோட்டார் பைக்கில் பகல் 12.10 மணிக்கு வாக்குச்சாவடி மையத்துக்கு வந்த முதல்வர் ரங்கசாமி வாக்கு சாவடி மையத்தினுள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் துாரம் வரை நடந்து வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது. இதனால் மக்கள் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அளிப்பார்கள்" என்றார்.
முதல்வர் ரங்கசாமி வாக்களிக்க வருவதையொட்டி வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முதுநிலை எஸ்.பி. பிரவீர் ரஞ்சன் பார்வையிட்டார். முன்னதாக தேர்தலை முன்னிட்டு என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் அழைத்து கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலில் சிறப்பு பூஜைகளை நேற்று இரவு மற்றும் இன்று காலையும் ரங்கசாமி நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT