Last Updated : 02 May, 2022 11:04 PM

2  

Published : 02 May 2022 11:04 PM
Last Updated : 02 May 2022 11:04 PM

பத்திரப்பதிவு துறையில் மோசடியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறைதீர்வு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருப்பத்தூர்: பத்திரப்பதிவுத்துறையில் மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிவுத்துறையில் இதுவரை 44 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் சிவன்அருள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ''தமிழகத்தில் 5,516 பத்திரங்கள் ஆள் மாறாட்டம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பத்திரங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட்டு, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் அனைத்தும் பத்திரப்பதிவு பதிவுத்துறை அதிகாரிகள் மூலம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட பதிவுத்துறை அலுவலகம் கொண்டு வரப்பட்டு பதிவுத்துறை மாவட்ட அலுவலர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். எந்த பத்திரப்பதிவாக இருந்தாலும் தவறான ஆட்களிடம் (இடைத்தரகர்கள்) சென்று பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்.

நேரடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் முறையான வகையில் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். தவறான ஆட்களிடம் சென்று பொது மக்கள் ஏமாற வேண்டாம். தமிழகத்தில் 38 மாவட்டங்களில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பொதுமக்கள் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில் சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவு துறையில் இந்த ஆண்டு 16 ஆயிரம் கோடியே 21 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ1,300 கோடி வரை அரசுக்கு பத்திரப்பதிவு துறை மூலம் கிடைத்துள்ளது. இதுவரை 2,100 போலி பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போலி பத்திரங்களை கண்டறிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திர ஆவண எழுத்தர்கள் தற்போது தமிழகத்தில் 14 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே இனி ஆவண எழுத்தாளர் உரிமம் வழங்கப்படும். பத்திரப்பதிவு துறையில் மோசடியில் ஈடுபட்ட 44 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பத்திரப்பதிவுத் துறையில் அதிகாரிகள், சார் பதிவாளர்கள் உள்ளிட்ட பதிவுத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வருவாய்த்துறை சார்பில் வரையறுக்கப்பட்டு புதிதாக சார் பதிவாளர் அலுவலகங்கள் தொடங்க நடவடிக்கை எடுத்து, புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் தொடங்கப்படும். திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கூட அதிக அளவில் முறைகேடான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனை தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x