Published : 02 May 2022 05:40 PM
Last Updated : 02 May 2022 05:40 PM
சென்னை: "பல ஆண்டுகளாக மாங்காய்களை கல் கொண்டுதான் பழுக்க வைக்கிறோம். ரசாயனங்கள் இல்லாமல் மாங்காய்களை பழுக்க வைக்க முடியாது. எனவே கோயம்பேடு சந்தைக்கு வரும் மாங்காய்களை பழுக்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும்" என்று சென்னை - கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
சென்னை - கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: "ரசாயனம் இல்லாமல் மாங்காய்களை பழுக்க வைக்க முடியாது. பல ஆண்டுகளாக கல் வைத்துதான் மாங்காய்களை பழுக்க வைத்து வருகிறோம். இந்த கார்பைட் கல் என்பதை, சீனா கல் என்று தற்போது புதிதாக கூறுகின்றனர். ஆனால், அந்தக் கல் ஹைதராபாத்தில் இருந்து பாக்கெட்டுக்களில் வருகிறது. அதற்கு அங்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. அதனை உபயோகப்படுத்துகின்றனர்.
ஆனால், இங்கிருக்கிற அதிகாரிகள் யாரும் அதனை முறைபடுத்துவது கிடையாது. ஒருவேளை முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், வியாபாரிகளுக்கு தகவலை தெரிவித்துவிட்டு, அதன்பிறகு வந்து சோதனை செய்ய வேண்டும்.
அதிகாரிகள் ரவுடித்தனம் செய்வதுபோல் சோதனை செய்வது சரியில்ல. எங்களைப் பொருத்தவரை சிஓ என்று ஓர் அதிகாரியை நியமித்து விட்டனர். எனவே, அந்த அதிகாரி மூலமாக எங்களை அணுகி, தவறு செய்யும் வியாபாரிகளைக் கண்டித்து, அதிகாரிகள் சொல்வதை செய்யவில்லை என்றால், சம்பவந்தப்பட்டவர்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்தலாம். ஆனால், அதிகாரிகள் திடீரென்று, ஒருநாள் வந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மாம்பழங்களை அள்ளிக்கொண்டு போய் குப்பையில் போடுகின்றனர். எனவே, விற்பனைக்காக கோயம்பேடு சந்தைக்கு வரும் மாங்காய்களை பழுக்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT